Close
நவம்பர் 21, 2024 4:51 மணி

ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் நாங்கள் அனைவரும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என ஆந்திரா மாநில அமைச்சரும், நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், நடிகையுமான ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திரைப்பட நடிகையும் , நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான ரோஜா இன்று காலை சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறியதாவது: நான் ஒவ்வொரு வருடமும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்து வருகிறேன்.
அதேபோன்று இந்த வருடமும் நேற்று இரவு கிரிவலம் வந்து இன்று அண்ணாமலையாரையும் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தேன். இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.  மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் அருள் எங்களுக்கு கிடைக்க வேண்டும், இதன் மூலம் பொது மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும், எங்களுடைய தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக முதல்வராக வேண்டும் என மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டேன். நான் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டேன்.
ஜனசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார். ஆனால் ஆந்திர மக்கள் தெளிவாக இருக்கின்றனர். தங்களுக்காக பாடுபட்டவர்கள் யார் நல்லது செய்தவர்கள் யார் என அவர்கள் அறிந்திருக்கின்றனர், எனவே ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கண்டிப்பாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம், மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளதால் வெற்றி எங்களுக்கே என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை ரோஜா மூன்றாவது முறையாக போட்டியிட்டு உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top