சிவகங்கை, ஆக : சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.எம். மணிமுத்து(65) மாரடைப்பால் வியாழக்கிழமை மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலராகவும், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவராக பதவி வகித்து வந்த கே.எஸ்.எம். மணிமுத்து, வியாழக்கிழமை காலை சுதந்திர தின கிராம சபைக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் காஞ்சிரங்காலில் உள்ள அவரது வீட்டு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் வாரிசுகள் உள்ளனர்.
மறைந்த ஊராட்சித்தலைவர் கே.எஸ்.எம் மணிமுத்துவின் உடலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், சிவகங்கை மக்களவை தொகுதி எம்பி- கார்த்திசிதம்பரம், மாவட்டத்துணைச்செயலர் சேங்கைமாறன், நகர் மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன், துபாய்காந்தி, கார்கண்ணன், விஜயகுமார் மற்றும் சிவகங்கை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை ஊராட்சித்தலைவர் மணிமுத்துவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.