பத்திரிகையாளர் நலவாரியம் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு 21 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்களாட்சியின் பாதுகாவலர்களான பத்திரிகையாளர்களின் நலனில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டார். பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது 3300 பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை உள்பட 21 வகையான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாண்டு காலம் பத்திரிகையாளர்களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டை (அக்ரிட்டேஷன் கார்டு) வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த அரசு பொறுப்பேற்றதும் அங்கீகார அட்டை வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டு தற்போது வரை 2431 செய்தியாளர் அங்கீகார அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.
பத்திரிகையாளர் நல வாரிய பரிந்துரையின் அடிப்படையில் செய்தியாளர் ஓய்வூதியம் மற்றும் மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
‘முதலில் நான் பத்திரிகையாளன். பிறகு தான் அரசியல்வாதி’ என்பார் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. அவர் காட்டிய வழியில் முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாகவும், பத்திரிகையாளர்களின் நலன்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.