Close
ஏப்ரல் 2, 2025 8:27 மணி

விழுப்புரத்தில் கொந்தளிப்பின் உச்சம்: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்

அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது ஆத்திரத்தில் இருந்த மக்கள் சேற்றை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழகத்தில்  உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிக பட்சமாக விழுப்புரம் மாவட்டம் மைலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமார் 51 செமீ வரை மழை அளவு பதிவாகி இருந்தது.

மேலும் முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையில் இருந்து திறந்த விடப்பட்ட  1.60  லட்சம் கன அடி தண்ணீரால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் கடந்த இரண்டு நாட்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

அரசு சார்பில், பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து இருந்தாலும் வீடு ,வாசல்களை இழந்த பலர் அரசு மீது உள்ள கோபத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், நிவாரண முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகவும், மாவட்ட ஆட்சியர் பழனி உள்பட அதிகாரிகளுடன் காரில் சென்றார்.

அவர் காரில் இருந்தபடியே எல்லா இடங்களுக்கும் சென்று உள்ளார். இதன் காரணமாக ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்த மக்கள் மீண்டும் கொந்தளித்தனர். அவர்கள் சேற்றை வாரி அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது வீசினர். இதனால் அமைச்சர் பொன்முடியின் வெள்ளை சட்டை முழுவதும் சேறானது.

போலீசார் உடனடியாக அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் கோஷம் போட்டதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை  ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top