வங்கதேச இந்துக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் எச் ராஜா கோவையில் கைது செய்யப்பட்டார்.
நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சிறுபான்மை மக்களான இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அந்நாட்டு போலீசும், ராணுவமும் வேடிக்கை பார்க்கிறது. இதன் காரணமாக வங்காள தேசத்தில் இந்துக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
இஸ்கான் அமைப்பின் தலைவர் கிருஷ்ணதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை வேடிக்கை பார்க்காமல் இந்தியா தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும், உலக நாடுகளின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வதற்காகவும் இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போலீஸ் தடையை மீறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கோவையில் போலீஸ் தடையை மீறி வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக நீதி கேட்டு போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.