கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். சுமார் நான்கரை ஆண்டு காலம் அவர் முதல்வர் பதவியில் இருந்தார்.
அந்த கால கட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ந்தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவின் பங்களாவில் கூர்க்கா கொலை செய்யப்பட்டு அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில் இந்த கொடநாடு பங்களாவில் தங்கி இருந்து தான் பல முக்கிய முடிவுகளை எடுத்தாலும், அவர் அடிக்கடி அங்கு ஓய்வு எடுத்தாலும் இந்த பங்களா முக்கிய இடம் பிடித்தது.
கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். ஆடிட்டர் தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் மர்ம நாவல் போல் நீண்டுகொண்டே சென்றது. கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரால் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தீபு, சதீஷ் ஆகியோர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி நீலகிரி மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அப்போது அனுமதி வழங்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து திப்பு உள்ளவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீடு மனு மீது ஏற்கனவே விசாரணை நடத்தி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல் முருகன் இன்று தீர்ப்பளித்தார். கொட நாடு கொலை வழக்கு தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பா உள்ளிட்ட 18 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ளார்.
இந்த தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.