Close
ஏப்ரல் 3, 2025 4:30 காலை

பாமகவுக்குள் புயலை கிளப்பிய முகுந்தன் பரசுராமன்… யார் இவர்?

புதுச்சேரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சயின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கௌரவ தலைவர் ஜிகே மணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

இளைஞர் அணி தலைவராக இருந்த ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து முகுந்தன் பரசுராமனை அந்த பதவியில் நியமித்தார் டாக்டர் ராமதாஸ். இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டதும் இதற்கு கட்சியின் மாநில தலைவரான அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனால் கடுப்பான பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கட்சியை உருவாக்கியது தான்தான் என்றும் தான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று கூறினார். தனது கருத்தை கேட்க முடியாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்றும் அதிரடியாக கூறினார் ராமதாஸ்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அன்புமணி ராமதாஸ் சென்னை உள்ள பனையூரில் தனியாக கட்சி அலுவலகம் திறந்து இருப்பதாகவும் அங்கு வந்து தொண்டர்கள் தன்னை சந்திக்கலாம் என்றும் கூறினார். இதனால் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாமகவுக்குள் இப்படி ஒரு புயல் வீச காரணமாக இருந்த முகுந்தன் பரசுராமன் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் வேறு யாருமல்ல… ராமதாஸின் சொந்த பேரன் தான். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி – பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். அவர் தான் தற்போது கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முகுந்தன் பரசுராமனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநில செயலாளராக பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது சகோதரி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top