சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்த நபரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்ததின் பேரில் கைது செய்யப்பட்டார். அச்சம்பவம் மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது.
மேலும் இது தொடர்பாக உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கவும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் இச்செயலினை கண்டித்தும் , உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் செயல் அற்ற தன்மையை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூடுதல் காவல் பணிக்கு இருந்த காவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை தங்க வைத்துள்ளது.
இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது