Close
ஏப்ரல் 4, 2025 6:16 காலை

முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன்! அமித்ஷாவின் அதிரடி கணக்கு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வந்தாலும், இதுவரை அதிமுக கூட்டணியில் பாஜக இணையுமா என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

அவர் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு பாஜக ஒப்புக்கொண்டால் மட்டுமே அதிமுக கூட்டணியில் பாஜக இணைக்கப்படும் என கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கக் கூடாது மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்த கூடாது என்ற நிபந்தனைகள் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் ஒருங்கிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது என்பதை 2021, 2024 தேர்தலில் பார்த்துவிட்டதால் ஒருங்கிணைந்த அதிமுக தான் வேண்டும் என்பதே அமித்ஷாவின் முடிவு என கூறப்படுகிறது.

இதனால், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, செங்கோட்டையனை அந்த பதவியில் அமர்த்த அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறலாம். மேலும் செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், பல ஆண்டுகள் போராடி பொதுச் செயலாளர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, அதனை எளிதாக விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஆனால் அதே நேரத்தில், சில முக்கிய அதிமுக தலைவர்களை செங்கோட்டையன் அணிக்கு இழுத்துவிட்டால், எடப்பாடி பழனிச்சாமியை ஒதுக்குவது மிக எளிதாகிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

அரசியல் சதுரங்கத்தில் அமித்ஷா நகர்த்தும் காய்கள், அதிமுகவில் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top