போராளிகள்வட்டாக்குடிஇரணியன்,சிவராமன், ஆறுமுகம் ஆகியோரது நினைவு நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் ரயிலடி முன்பு இடதுசாரிகள் பொதுமேடைகளில் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஐ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
தியாகிகள் வட்டாக்குடி இரணியன்,சிவராமன், ஆறுமுகம் ஆகியோரது உருவப் படத்திற்கு ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக முதலாளித்துவத்துக்கு மாற்றாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவிட கொள்கைகளை வகுத்து, சோசலிச பொருளாதாரத்தை முன்னிறுத்திய தோழர் மார்க்ஸ் பிறந்த நாள் நிகழ்விற்கு சிபிஐ(எம்) மாவட்ட நிர்வாகி என் குருசாமி தலைமை வகித்தார். மார்க்ஸ் உருவப் படத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
நாடு 1947 ல் விடுதலை அடைந்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலவுடமை,பண்ணை, ஜமீன் கொடுமைகள் அதிகம் நிறைந்திருந்தன. சிறு விவசாயிகள், உழைக்கும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர்.
தோளில் துண்டு போட அனுமதி கிடையாது, காலில் செருப்பு அணிய அனுமதி கிடையாது, தெருக்களில் நடமாட முடியாது. தங்கள் உழைப்பிற்கு சொற்ப கூலிகள் பெற்று வயிற்றை நிரப்பி உழைத்து வந்தனர். பெண்கள் ஜமீன்களின் சுக போக பொருளாக மாற்றப்பட்டனர்.
இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகளாக இருந்த வாட்டாகுடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோர் மக்களை திரட்டி போராடி சுயமரியாதையும், கூலி உயர்வையும் பெற்றுத் தந்தனர். நிலவுடமை கொடுமை களுக்கு முடிவு கட்டினர்.
இதை பொறுக்காத ஆளும் வர்க்கம், சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் இந்த போராளிகளை காட்டிக் கொடுத்தால் சன்மானம் என்று அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 1950 மே 3, 4 தேதிகளில் வட்டாக்குடி இரணியன், சிவராமன், ஆறுமுகம் போலீசாரால் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். மே 5-ஆம் தேதி பட்டுக்கோட்டை ரயிலடி அருகே மூவரின் உடல்களையும் போலீசாரே அடக்கம் செய்தனர்.
இந்த மூன்று தியாகிகளின் 72 ஆவது ஆண்டு நினைவு நாள் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் நடந்த நிகழ்வில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி மக்களை சாதி ரீதியாக,மத ரீதியாக பிளவுபடுத்துகின்ற, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய, நாட்டு மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்து வருகின்ற ,ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகவும், கருத்துரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்ற காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகவும் அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என உறுதியேற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாசலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர். எஸ். வடிவேலன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, சிஐடியூ நிர்வாகி ஜெயபிரகாஷ்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப் பாளர் ராஜேந்திரன், எழுத்தாளர் சாம்பான், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் எம்.பி.நாத்திகன், பல்வேறு இயக்க நிர்வாகிகள் ஆர்.பி.முத்துக்குமார்.
மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய உணர்வார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சாமிநாதன், மூர்த்தி, லட்சுமணன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சிபிஐ மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர் நன்றி கூறினார். செய்தி::: துரை.மதிவாணன்.