புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 28,472 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், 2023 -ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் கடந்த 9 -ஆம் தேதி வெளியிட்டார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,61,124 ஆண் வாக்காளர்கள், 6,78,887 பெண் வாக்காளர்கள் மற்றும் 65 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,40,076 வாக்காளர்கள் 2023-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
2022ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (05.01.2022 -இன் படி) மொத்தம் 13,63,126 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
05.01.2022 முதல் 20.10.2022 வரை நடைபெற்ற 2022ஆம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின்போது, 2,352 ஆண் வாக்காளர்கள், 3,070 பெண் வாக்காளர்கள் சேர்த்து மொத்தம் 5,422 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 12,105 ஆண் வாக்காளர்கள், 16,361 பெண் வாக்காளர்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 28,472 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில்; நகர எல்கைக்குள்; 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள்; 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-இன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற 09.11.2022 முதல் 08.12.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 05.01.2023 (வியாழக்கிழமை) அன்று வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர்களின் வசதிக்கேற்ப 12.11.2022 (சனிக்கிழமை), 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை), 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 தினங்கள் சிறப்பு முகாம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (12.11.2022) இன்று நடைபெற்ற சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-இன் கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தப் பணிகள் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2023 -ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 09.11.2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 09.11.2022 முதல் 08.12.2022 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பொதுமக்களி டமிருந்து பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தினங்களில், விண்ணப்பங்கள் பெறுவதற்கென சிறப்பு முகாம்களும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 12.11.2022 அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் 13.11.2022 (ஞாயிற்றுகிழமை), 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை அனைத்து வாக்குசாவடி மைய அலுவலர் களிடம் காலை 09.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை அளிக்கலாம்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.