வட சென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து புது வண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளை சார்ந்த திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த தேர்தலில் ஒன்றாக இருந்த எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகள் தற்போது தனித்தனி அணிகளாக போட்டியிடுகின்றன . எனவே கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற திமுக கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
வடசென்னை பகுதியை மேம்படுத்துவதில் பல்வேறு திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன குறிப்பாக ஆயிரம் கோடியில் வடசென்னை பகுதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் கத்திவாக்கம் எண்ணூர் வரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகம் மாற்றி அமைக்கப்படும். வடசென்னை பகுதிகளில் ஏழை எளியோர் நடுத்தர மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல கட்டங்களில் இலவச வீட்டு மனைகள் அளிக்கப்பட்டுள்ளன.ஆனால் இந்த வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்குவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன.
இதனால் புதிய வீடுகள் கட்டுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இப்ப பிரச்சனையை தீர்க்கும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவின் பரிந்துரையின் பேரில் விரைவில் வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் உதயநிதி.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் மாதவரம் எஸ் சுதர்சனம் எம்எல்ஏ, ஆர் டி சேகர் எம்எல்ஏ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.சங்கர்(திருவொற்றியூர்) ஐட்ரீம் இரா மூர்த்தி (ராயபுரம்), ஜேஜே எபினேசர் (ஆர் கே நகர்), பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, ம.அருள்தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.