விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்டது அம்பலம்
குவாரியை மூட அதிகாரிகள் நடவடிக்கை. சிபிஎம் தலைமையிலான காத்திருப்புப் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
புதுக்கோட்டை அருகே விதிகளை மீறி, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ஆய்வில் தெரிய வந்ததால் குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா வத்தனாகுறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்ப்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதிதிராவிடர் கூட்டு குடியிருப்பு அருகே கிரஷர், தார் பிளான்ட் கல்குவாரியுடன் சட்டத்திற்கு விரோதமாக செயல்படக்கூடிய எம்.எம்.கிரஷரை உடனடியாக மூடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையின் கவனத்திற்கு கிராம மக்கள் இப்பிரச்னையைக் கொண்டு சென்றனர்.
ஏற்கெனவே, இரண்டு கட்டப் போராட்டங்களை நடத்தியும் முறையான நடவடிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த வியாழக்கிழமை முதல் இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட் பகுதியை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமையன்று நில அளவையினருடன் சென்று அளந்து பார்த்தனர். அப்போது பொழுது சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக அந்த கிரஷர் செயல்படுவது தெரியவந்தது.
குறிப்பாக விதிகளின் படி குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு 300 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் 260 மீட்டரில் குவாரி உள்ளது. கோவிலுக்கு அப்பால் 500 மீட்டரைத் தாண்டி இருக்க வேண்டிய குவாரி 209 மீட்டரில் உள்ளது. குளத்திற்கு 300 மீட்டர் தாண்டியிக்க வேண்டும். ஆனால் 119 மீட்டரிலேயே உள்ளது.
மேலும், புறம்போக்கு நிலத்தை பினாமி பெயரில் பட்டா வங்கி பின்னர் கிரஷர் முதலாளி தன் பெயரில் கிரயம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது சொந்தமான நிலத்தைத் தாண்டி அதிக அளவில் புறம்போக்கு நிலத்தில் குவாரிக்கான கல்லை வெட்டி எடுத்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலுப்பூர் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், கீரனூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில், எம்.எம். கிரஷர் உரிமையாளர் ஆக்கிரமித்துள்ள இடத்தை அறிவிப்புக் கொடுத்து வருகின்ற 27.9.2022 அன்று அகற்றப்படும். அனுமதி பெறாத புல எண்ணில் கனிம வளங்கள் வெட்டி வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக சம்மந்தப்பட்ட உரிமையாளரை 27.9.2022 அன்று இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணை முடிந்தபின் விதிகளின்படி ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்எம் கிரஷர் மற்றும் எம்.எம். சேன்ட நிறுவனங்களால் சுற்றியுள்ள பகுதியில் மாசு ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ள புகாரின் மீது தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்வது. ஆய்வு முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.முருகேசனுக்குச் சொந்தமான குவாரி உரிமை விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமல் இதர புலன்களில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் குவாரி உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு முடிவான ஆணை பிறப்பிக்கப்படும் என பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனால், இரண்டு நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. இந்த வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.