மக்களுக்கு சேவை செய்யவும் அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏஐடியுசி மத்திய சங்க துணைத் தலைவராகவும், தஞ்சாவூர் நகர் கிளை ஓட்டுனராகவும் பணி புரிந்து வந்த எஸ்.ரவி அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு மே 22 -ஆம் தேதி தனது பணியின் போது மாரடைப்பால் காலமானார்.
இவர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, வேலை நிறுத்தம் உள்ளிட்டு ஏராளமான போராட்டங்களில் கலந்து கொண்டவர். சிறை சென்றவர். இவரது ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு நடைபெற்றது.
கும்பகோணம் போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலாளர் எஸ் . தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் புகழஞ்சலி உரையாற்றினார்.
இதில், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், சகோதர தொழிற்சங்க தலைவர்கள் சி.ராஜமன்னன், கதிரவன், தி.மணிகண்டன், ஏ.முருகேசன், சித்திரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மக்களுக்கு சிறப்பான சேவை அளித்து வரும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை அரசும் கழக நிர்வாகமும் கைவிட வேண்டும்.
காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். அனைத்து பேருந்து களும் முழுமையாக இயக்கப்பட வேண்டும். பேருந்துகளின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய தரமான, தேவையான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. .
முடிவில் மக்களுக்கு சேவை செய்யும் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாப்போம். போராடி பெற்ற தொழிலாளர் நல உரிமைகளை, தொழிற்சங்க உரிமைகளை பாதுகாப் போம். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்வு காண துணை நிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது. முன்னதாக ரவி உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.