Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை

மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காசிமேடு மீன்பிடித் துறைமுக ஐஸ் கட்டி உற்பத்தியாளர்கள்.

மீன் பதப்படுத்தும் தொழிலை பாதுகாக்கும் வகையில் மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி காசிமேடு மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200 -க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடிகளை ஏந்தி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சென்னை மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.ஈ.ராஜா, செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது:

சென்னை மீன்பிடி துறைமுக வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஐஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.  இதில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.  இதேபோல் தமிழகத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்திருக்கும் இடங்களில் மொத்தமாக ஐநூறுக்கும் மேற்பட்ட ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளனர்.

 மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை சந்தைப்படுத்தும் வகையில் மீன்களை பதப்படுத்துவதில் ஐஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.  இத்தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு பெரிய தொழிற்சாலைகளுக்கு விதிக்கப் படுவது போல கட்டண விகிதம் உள்ளது.  குறிப்பிட்ட நேரத்திற்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்கு , சாதாரண கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் விதிப்பது,  மேலும் ஆண்டு முழுவதும் குறைந்தபட்ச நிரந்தரக் கட்டணங்களை விதிப்பது உள்ளிட்டவைகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ளது.

ஐஸ் உற்பத்தி என்பது 24 மணி நேரமும் மின்விநியோகம் இருக்க வேண்டும். இத்தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் களை பயன்படுத்த முடியாது. மேலும் ஆண்டுக்கு 2 மாத மீன்பிடித் தடைகாலம், புயல் மற்றும் பருவமழைக் காலங்களில் ஐஸ் உற்பத்தி தேவை வெகுவாகக் குறைந்துவிடும். இத்தகைய காலங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தேவை இல்லாதபோதும் குறிப்பிட்ட நிரந்தரக் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதனால் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  எனவே மின்கட்டணத்தை குறைக்குமாறு நாங்கள் கோரிக்கவிடுக்காத நிலையில்  பயன்படுத்தும் மின் அலகு அடிப்படையில் மட்டும் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு எங்களது கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top