அரசு இடங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரசுக்குச் சொந்தமான இடங்களில் மூன்று தலைமுறை களாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவிவரம்:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் மதுக்கூர் வடக்கு,ஆலத்தூர், வாட்டாகுடி தெற்கு, சொக்கனாவூர், புளியகுடி, கருப்பூர் மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, சாலையோரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் காடுமேடாக, பள்ளம், படுகுழியாக கிடந்த இடங்களை மராமத்து செய்து, சமதளம் ஆக்கி சொந்த செலவில் வீடு கட்டி 3 தலைமுறைகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார் கள்.
இவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மின்சாரம், குடிதண்ணீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டி பலமுறை வட்டார அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பட்டா கிடைக்காததால் அரசு வழங்கும் இலவச வீடு மற்றும் சலுகைகள் உட்பட எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே நீண்ட காலமாக பட்டா கிடைக்க போராடிக் கொண்டிருக்கிறார். அரசு இடங்களில் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் சரி செய்து வைத்திருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம், பாரதிமோகன் தலைமையில் மாவட்ட செயலாளர் சி. பக்கிரிசாமி , விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.சந்திரகுமார், சங்க நிர்வாகிகள் தங்கராசு, செல்வம், சக்தி, முருகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்ராபதி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர்கள் துரை.மதிவாணன், ஆர்.பி.முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.