வேளாண் விளைபொருள்களுக்கு ஆதாரவிலை உத்தரவாதச் சட்டம் கொண்டுவர வேண்டுமென வேளாண் விளைபொருள் குறைந்தபட்ச விலை உரிமைக்கான விவசாயிகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் விவசாய விளைபொருள் ஆதார விலைபொருள் குறைந்தபட்ச விலை உரிமைக்கான இயக்கத்தின் ஆலோசனைக்கூட்டம் இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை வெளிப் படைத் தன்மையுடன் இருக்கும் வகையில், பொதுமக்களின் பார்வைக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதேபோல இக்குழுவின் செயல்பாடுகள் மீது நம்பகத்தன்மை வரும் வகையில் செயல்பாடுகளில், விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
எல்லாவகையான தரவுகளையும், தகவல்களையும் வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். இந்த ஆதார விலை என்பது நாட்டின் உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், குறைந்த பட்ச ஆதார விலை உத்தரவாதச் சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விளக்கமும், பயிற்சியும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஆதார விலை குறிப்பிட்ட பருவத்துக்கும், குறிப்பிட்ட பயிர்களுக்கும் என்ற விதிகளைத் தளர்த்தி எல்லாப் பயிர்களுக்கும், எல்லா பருவத்துக்கும் என மாற்றி நிர்ணயம் செய்ய வேண்டும்.
அரசால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக வெளிச்சந்தையில் விலை நிர்ணயம் செய்வதை சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் வழக்குரைஞர் த. குருசாமி முன்னிலை வகித்தார். கிசான் மஸ்தூர் சங்ராஷ் குழுவின் சர்வன் சிங் பந்தேர், ராஜ்விந்தர் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாங்கெட், கேரளத்தைச் சேர்ந்த ஜான் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து வரும் பிப். 28 -ஆம் தேதி தில்லியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.