Close
நவம்பர் 22, 2024 2:08 காலை

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பருவமழை பொய்த்துப்பேனதால் புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியதாவது:

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை எற்படுத்தியுள்ளது. அதற்கு நேர்மாறாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வறட்சி தாண்டவமாடுகிறது. மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏரி, குளம், கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், மானாவரி சாகுபடிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து ஆழ்துளை மற்றும் கிணற்றுப் பாசனமும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இதனால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கடன் வலையில் சிக்கி சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும், சிறுதாணியங்களை மதிப்புக்கூட்டி விவசாயிகள் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top