Close
நவம்பர் 21, 2024 7:51 மணி

கலைஞர்களை, குழுக்களை புறக்கணிக்கும் போக்கை கலை பண்பாட்டு துறை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் மக்கள் கலை இலக்கிய கழகம், மாற்று ஊடக மையம், அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கலை பண்பாட்டு துறையால் தேர்வு செய்யப்பட்ட கலைக் குழுக்கள், கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் கலை இலக்கிய கழகம், மாற்று ஊடக மையம், அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை  தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகஇக மாநில இணை பொதுச்செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாற்று ஊடக மையம் மற்றும் அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. காளீஸ்வரன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி பி எம்எல் மக்கள் விடுதலை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கசி.விடுதலைகுமரன்.

மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம்,  தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் சாம்பான், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மாற்று ஊடக மையம் தலைவர் குரு. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.

கோரிக்கைகளை விளக்கி மாற்று ஊடக மையம் மற்றும் அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. காளீஸ்வரன் பேசியதாவது:

சுமார் 37,000 ம் இசைக் கலைஞர்களை இந்து சமய அறநிலை யத்துறை கோயில்களில் பணியமர்த்த வேண்டும், பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் கலை வழிக் கல்வி வகுப்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்றுனர் ஊதியம் ரூபாய் 300 ஊதியத்தை ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நாட்டுப்புற கலையை பாடமாக வைக்க வேண்டும். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே செயல் பட்டு வந்து முடக்கப்பட்டுள்ள கூத்துக்களறி இளங்கலை பாடத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 3000 -க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களில் அந்தந்த மாவட்ட கலைஞர்களுக்கு வாரம் இரண்டு நாள் வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரால் நாட்டுப்புற கலைகளுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும். சாதி,மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து கலைஞர்களையும் முறையாக நடத்த வேண்டும் என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் கலை பண்பாட்டு துறையால் தேர்வு செய்யப்பட்ட கலைக் குழுக்களை, கலைஞர்களை புறக்கணித்து, அவமதிக்கும் போக்கை கைவிட வேண்டும். இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு துறையில் இருந்து தரகர்களை வெளியேற்ற வேண்டும்.

இவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக் காக அமைக்கப்பட்டுள்ள நலவாரியம்,கலை பண்பாட்டு துறை மற்றும் இயல் இசை நாடக மன்றத்தின் ஒருங்கிணைந் த செயல்பாட்டை உருவாக்க வேண்டும்.

நடைமுறைப்படுத்த வேண்டும், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கலை குழுக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் நிகழ்ச்சிகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட நல வாரியத்திற்கான நிதி நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல்  அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.

தஞ்சை கலைக்கூடம் செம்மொழி, மாதர் சங்க மாநில உறுப்பினர் கலைச்செல்வி , பாரதி கலைக்குழு ராஜேந்திரன், அறிவொளி இயக்க கலைக்குழு அமலதாஸ், சடையப்ப வள்ளல் கலைக்குழு குமார், மாற்று ஊடக மையம் நிர்வாகி கள் தங்கவேல் சுதாகர், அருள் , திருமாவளவன், சுந்தரவேல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top