Close
நவம்பர் 21, 2024 12:20 மணி

புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டருடன் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர்

ஓன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி  ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் டிராக்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றபோது ஒன்றிய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியறுத்தி புதுக்கோட்டை ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டருடன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக நடத்திய போராட் டத்தின் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை யும் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. திரும்பப் பெற்றபோது ஒன்றிய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பேரணிக்கு அனுமதி மறுப்பு :  அதனொரு பகுதியாக குடியரசு தினத்தன்று நாடுமுழுவதும் டிராக்டருடன் பேரணி-ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவெடுத்தது.

அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் விவசாயிகள் டிராக்டருடன் பேரணி நடத்துவதற்குத் தயாரானார்கள். பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து டிராக்டருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.மாதவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ராமையன், அ.ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.முகமதலி கண்டன உரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் க.சுந்தர்ராஜன், த.அன்பழகன் ராஜசேகரன், ரமேஷ், சி.ஜீவானந்தம், தென்றல் கருப்பையா தோழமைச் சங்க நிர்வாகிகள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், கே.முகமதலி ஜின்னா உள்ளிட்டோர் பேசினர்.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றபோது ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை சட்டமாக்க வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

நூறுநாள் வேலைத் திட்டத்திற்குத்  தேவையான நிதியை விடுவிக்க வேண்டும். 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப் புகளைக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். மழை, வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனடியாக வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top