புதிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து ஒன்றிய அரசு நடைமுறைப் படுத்தி உள்ள சட்டத்தில் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் ஆர்.மலைச்சாமி, நிர்வாகிகள் கேஆனந்தராமன், த.சரவணன்,கே. ராஜா, எஸ்.கணேசன், ஏ.பிரிட்டோ, எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏ ஐ டி யூ சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் தொடக்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகளை விளக்கி ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்கம் பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை,தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், தையல் சங்க மாவட்ட செயலாளர்கே.கல்யாணி ,மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, மாநகர ஏஐடியூசி நிர்வாகி ஆர்.பிரபாகர், மோட்டார் வாகன தொழிலாளர் சங்க நிர்வாகி எம்.சொக்கலிங்கம், விவசாய தொழிலாளர் செயலாளர் மாவட்ட துணை செயலாளர் பி.குணசேகரன், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் என்.காளிதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார். முடிவில் ஆட்டோ சங்க மாநகர தலைவர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது. ஆட்டோ மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு உயர்த்திய சாலை வரியை திரும்ப பெற வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல்,டீசல்,கேஸ் வழங்கிட வேண்டும்.
ஆட்டோ தொழிலை சீரழிக்கும் ஓலா,ஊபர், ரேபிடோவை தடை செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் மீது போடப்படும் அநியாய ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும்,புதிய மோட்டார் வாகன சட்டத்தில் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தினால் ஏழு ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் என்ற விதியை ரத்து செய்ய வேண்டும்.
ஆட்டோ,கார், வேன்களுக்கான இன்சூரன்ஸ் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூல் செய்ய ஆட்டோ ஓட்டுநர்களிடம் அடாவடித்தனமான முறையில் வசூல் செய்வதையும், அநாகரீகமாக பேசுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த 60 வயது நிரம்பிய ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூபாய் 6000 -ம் வழங்க வேண்டும், சொந்த இடம்,வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் வீடு கட்ட 4 லட்சம் நிதியினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.