பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார்.
இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ராமேஸ்வரம் மற்றும் காசி முக்கியமானவை. இதில் ராமேஸ்வரம் தமிழகத்திலும், காசி உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அமைந்துள்ளன.
காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வி்ட்டு புனித நீருடன் வந்து ராமேஸ்வரத்திற்கு வந்து அங்குள்ள ராமநாத சுவாமி கோவிலிலும் வழிபாடு நடத்தினால் தான் காசி யாத்திரையின் முழு பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இப்படி யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பாதுகாப்பான பயணத்திற்காக ரயில்களையே தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் ராமேஸ்வரம் காசி இடையே பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இரண்டு ரயில்கள் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரும் தனி சமஸ்தானமாக இயங்கி வந்ததும், தற்போது மாவட்ட தலைநகராகவும் உள்ள புதுக்கோட்டையில் நிற்பது இல்லை என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட கால வருத்தமாகும்.
இந்த வேதனைக்கு பதில் அளித்து அவர்களது கோரிக்கையை தீர்த்து வைக்கும் வகையில் மதிமுகவின் முதன்மை செயலாளரும், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வ கோட்டை சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ பொதுமக்களின் கோரிக்கையை முன்வைத்து மதுரை இரயில்வே கோட்ட மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர விரைவு இரயில் (இரயில் எண் 22535) மற்றும்இராமேஸ்வரம் – அயோத்தி கேன்ட் – இராமேஸ்வரம் வாராந்திர விரைவு இரயில் (இரயில் எண் 22613/14) ஆகிய இரண்டு இரயில்களும்,
புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றும்,
இந்தக் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன், இது குறித்து மேலாளரை அலைபேசியிலும் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தேன். அவரும் விரைந்து பரிசீலித்து ஆவணம் செய்வதாக பதிலளித்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.