திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் மிகப் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவஸ்தலங்களில் முதன்மையானதாகும். கலிய நாயனார் பணிபுரிந்து அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற புகழுடையது இக்கோயில்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழாவும் ஒன்றாகும். 11 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தியாகராஜசுவாமி வீதி உலா உற்சவம் நடைபெற்றது.
பிப்.15 முதல் 25-ஆம் தேதிவரை தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவர் சந்திரசேகரர் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதன்படி வெள்ளிக்கிழமை சூரிய, சந்திர பிரபை, சனிக்கிழமை – பூத, சிம்ம வாகனம், ஞாயிற்றுக்கிழமை நாக,ரிஷப வாகனம், திங்கள்கிழமை-அதிகார நந்தி, அஸ்தமானகிரி வாகனம், செவ்வாய்க்கிழமை-யானை வாகனம், விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் வரும் பிப்.21 -ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை-குதிரை, இந்திர விமானம் உள்ளிட்டவைகளில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பிப்.23 -ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம்:
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர்- திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் உற்சவத் தின் ஒன்பதாம் நாளான பிப்.23-ம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது. அன்று மாலையே சுந்தரர்-சங்கிலி நாச்சியாருக்கு குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் சனிக்கிழமை கடலாடு தீர்த்தவாரி உற்சவமும், இறுதியாக பதினோறாம் நாள் ஞாயிற்றுக்கிழமை பந்தம்பறி திருநடன உற்சவமும் நடைபெற உள்ளன.
இத்துடன் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கிடையே கல்யாணசுந்தரர் திருமணத்தைக் காண்பதற்காக சென்னை மண்ணடி பவளக்காரத் தெருவிலிருந்து முருகப்பெருமான் வருகை தரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதில் நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டு மண்ணடியிலிருந்து திருவொற்றியூர் வரை நடைபயணமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் மாசிப் பெருவிழாவினையொட்டி நகரத்தார் சங்கம் சார்பில் தொடர் அன்னதானம் நடைபெற உள்ளது. இதற்கென பழங்காலத்திலேயே நகரத்தார் மண்டபம் அமைக்கப்பட்டு செட்டிநாடு சமையல் முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இது தவிர நூற்றுக்கணக்கான உபயதாரர்கள் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர் பந்தல்களை அமைத்து பக்தர்கள், பொதுமக்களுக்குச் சேவையாற்ற உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் தக்கார் ஆர்.ஹரிஹரன் தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவி தங்களைத் தவிர்க்கவும் காவல் உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்