Close
ஜூன் 30, 2024 4:22 மணி

திருவண்ணாமலையில் நாளை மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை எட்டாம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் அளிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலமாகும்.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. நினைத்தாலே முக்தி தரும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நாளை எட்டாம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.


விழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயில் முழுவதும் மின் அலங்காரங்கள் பூ அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்..
தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் மாலை 5 மணிக்கு சாய ரட்சை அபிஷேகமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.
மேலும் இரவு ஏழு முப்பது மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும் இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரண்டு முப்பது மணிக்கு மூன்றாம் கால பூஜையும் அதிகாலை நான்கு முப்பது மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடைபெறும்.
மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம்.
மேலும் நள்ளிரவு 12 மணிக்கு கருவறையின் மேற்கு திசையில் அருள் பாலிக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அன்று மட்டும் தாழம்பூ பூஜை நடைபெறுவது சிறப்பாகும்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பரதநாட்டியம், தேவார பாடல்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் ,ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ராஜகோபுரம் எதிரில் 108 தவில் நாதஸ்வர கலைஞர்கள் தொடர் இசை நிகழ்ச்சி காலை தொடங்கி மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரை நடைபெற உள்ளது.
இந்து அறநிலையத்துறை சார்பில் நாளை மாலை 6:00 மணி முதல் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் கலைஞர் சிலை அருகில் ஈசானிய மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் , அதனைத் தொடர்ந்து சுகிசிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் , இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் பக்தி இன்னிசை கச்சேரி, ஆகியவை சனிக்கிழமை காலை 6:00 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top