Close
நவம்பர் 21, 2024 5:24 மணி

திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது, திருநேர் அண்ணாமலையார் கோயில்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பழைமையான திருநோ் அண்ணாமலையாா் கோயிலில் உள்ள மூலவரை ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூரிய பகவான் வழிபடும் அபூா்வ நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி, குரோதி தமிழ்ப் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை இந்த அபூா்வ நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.
மகா தீபாராதனை காட்டப்பட்டது. காலை சரியாக 7 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து ஸ்ரீதிருநோ் அண்ணாமலையாா் கோயில் மூலவா் மீது சூரிய ஒளி பிரகாசித்தது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களும் முழங்க மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த அற்புத நிகழ்வுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் குவிந்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் , வட, தென் ஒத்தவாடை தெரு என சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெயில் அதிகம் இருந்ததால், குடை பிடித்துக் கொண்டு சில பக்தர்கள் காத்திருந்தனர்.
ஏறத்தாழ 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் சிலர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கோயில் உள்ளே குழந்தையுடன் வரும் தாய்மார்கள், முதியோர், கர்ப்பிணி மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, அடுத்த வாரம் சித்ரா பவுர்ணமிக்கு, இதைவிட பலமடங்கு கூட்டம் இருக்கும். எனவே, கோயிலுக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களின் தாகத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பக்தர்களுக்கும் குடிநீர்கிடைப்பதை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். சித்திரை மாத வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், கோயிலுக்கு வெளியே பந்தல் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top