மார்கழி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு . பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதேசி, ஆருத்ரா தரிசனம் என மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான் .அதில் முக்கியமான சிறப்பான ஒரு நாள் இந்த குசேலர் தினம்.
குசேலர் அதிதியாகச் சென்று பகவானை தரிசனம் செய்து பயன்பெற்ற நாள் என்பதால் திதி கணக்கின்றி மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சிறப்பு நாளான இன்று கிருஷ்ணருக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருளும் வீட்டில் துன்பங்கள் நீங்கியும் கிருஷ்ணரின் பரிபூரண அருளும் கிடைத்து வாழ்க்கையே சந்தோஷமாக மாறிவிடுமாம்.
மார்கழி மாதத்தில் வரும் முதல் புதன்கிழமை நாளில் தான் குசேலர், கண்ணனுக்கு அவல் கொடுத்து ஏராளமான செல்வங்களை பெற்றார். வீடுகளில் இன்றைய தினம் குசேலோபாக்யானம் எனப்படும் குசேலரின் கதையை படிப்பார்கள். இது மிகவும் புண்ணிய பலனை நமக்கு பெற்றுத் தரும்.
புராணக்கதை
கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் பாலகர்களாக இருக்கும்போது சாந்தீபினி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலவாச முறையில் தங்கி கல்வி பயின்று வந்தார்கள். அவர்களுடன் சுதாமர் (குசேலர்) என்னும் பாலகரும் பயின்றார்.
(குசேலரின் உண்மையான பெயர் சுதாமா. ஆனால் அவர் வறுமையின் காரணமாக எப்போதும் கிழிந்த ஆடைகளையே உடுத்தி இருந்ததால் அவரை கேலி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லே குசேலர். குசேலர் என்றால் கிழிந்த ஆடைகளை அணிபவன் என்று பொருள்.)
கிருஷ்ணரும் பலராமரும் அவதார புருஷர்களாக இருந்தும் அவர்கள் உலகத்தாருக்கு வழிகாட்டும் நடைமுறையை பின்பற்றியே குருகுலவாசமாக ஒரு குருவிடம் கல்வி பயின்றார்கள்.
பிறகு கிருஷ்ணன் மதுராவின் அரசர் ஆனார். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமையை நீங்க கிருஷ்ணரால்தான் முடியும் என நினைத்த குசேலரின் மனைவி தனது கணவரை துவாரகை கண்ணனிடம் உதவி கேளுங்கள் என்கிறாள்.
உடனடியாக குசேலர் துவாரகை நோக்கி புறப்படுகிறார். அப்பொழுது அவரது மனைவி கண்ணனுக்கு மிகவும் பிடித்த அவலை ஒரு சிறு முடிப்பாக தன் கிழிசல் அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு துவாரகைக்குப் போகிறார்.
கிருஷ்ணர் இருக்கும் துவாரகா நகரை அடைந்து கிருஷ்ணரின் மாளிகைக்குள் வந்ததும், வைகுண்டத்திற்கே வந்தது போல் மகிழ்ந்தார். கிருஷ்ணர் அவரை வரவேற்று உபசரித்ததும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார் குசேலர்.
“எனக்கு என்ன கொண்டு வந்தாய்?” என்று கிருஷ்ணர் கேட்க
குசேலர் கொடுக்க தயங்கி மறைத்து வைத்திருந்த அவலை வாங்கி ஒரு பிடித்து எடுத்து கண்ணன் வாயில் போட்டார். கிருஷ்ணர் ஆவலோடு உண்ட அந்த கணத்தில் குசேலரின் வறுமை முற்றிலுமாக நீங்கி, எல்லா செல்வங்களும் அவரிடம் சென்று சேர்ந்தன. மார்கழி மாதத்தில் முதல் புதன்கிழமை இந்த புராணகால நண்பர்களின் சந்திப்பு நடந்ததால் வருடா வருடம் மார்கழி மாத முதல் புதன்கிழமை ‘குசேலர் தினமாக’ குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது.
இன்று நம் வீடுகளில் குசேலர் கிருஷ்ணருக்கு அளித்தது போல அவலை வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பிரசாதமாக கிருஷ்ண பகவானுக்கு படைத்து வழிபட்டால் நமக்கும் எல்லா வளங்களும் நம்மைத் தேடி வரும்.
இந்த நாளில் ஒரு சிறிய சிவப்பு நிற துணியில் அவல், வெல்லம் படைத்து நாராயணீயத்தில் 87வது தசகத்தை சொல்லி வழிபட்டால் வீட்டில் செல்வ செழிக்கும் என்பது நம்பிக்கை. சிவப்பு துணியை சிறிது சிறிதாக கிழித்து நைவேத்தியமாக படைக்கப்பட்ட அவளை பிரித்து அவற்றில் மூட்டையாக கட்டி, பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இதனால் குறையாத செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.