Close
பிப்ரவரி 22, 2025 1:03 மணி

தைப்பூசமும் காவடியின் தத்துவமும்!

தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை அம்மாவாசை, தை கிருத்திகை, ரதசப்தமி ,தைப்பூசம் என பல விழாக்கள் அமைந்திருக்கின்றன.
அதிலும் முக்கியமாக தைப்பூசம் திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைப்பூசம் என்றாலே முருக பக்தர்கள் மேளதாளத்தோடு காவடியில் பால்குடம் எடுத்துக் கொண்டு கோலாகலமாக முருகனின் பெயரை உற்சாகமாக ஓதிக்கொண்டு கோவிலுக்கு செல்வதை நாம் பார்க்கலாம்.

காவடி எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல அதற்காக விரதம் இருக்க வேண்டும் நல்லொழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் காலை மாலை கோவிலுக்கு சென்று இறைவனை மனதார வணங்க வேண்டும்.

காவடியின் தத்துவம்
இத்தகைய காவடியின் பெருமையை பற்றி திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத் தலைவர் லாயர் சந்திரமோகன் அவர்கள் கூறுகையில்,

காவுதடி என்பதிலிருந்து மருவி காவடி என்ற சொல் உருவானது. அந்தக்காலத்தில் சுமைகளை சுலபமாக நெடு நேரம் சுமக்க ஒரு கழியின் இரு புறமும் சுமைகளை கட்டிதூக்கிச் செல்வார்கள். அப்படி சுமையை தூக்க உதவும் தடி என்பது காவுதடி என்பதன் பொருள்.

சிவபெருமான் உத்தரவு பெற்ற அகத்தியர் சிவமலையையும் சக்திமலையையும் தென் பகுதியில் நிறுவுவதற்கு கொண்டு சென்றார். அதனை எப்படி கொண்டு செல்வது? அதற்காக ஒரு உபாயம் கண்டார். இரண்டு மலைகளையும் பொதிகை மலைக்கு கொண்டுவர முயன்ற குறுமுனி அதற்கு முருகப்பெருமான் அருள் வேண்டி வழிபட்டு இரு மலைகளையும் சுமந்து கேதாரம் வரை வந்தவர் சற்று ஓய்வெடுத்தார்.

அங்கு, குறுமுனியிடம் அவரது சீடரும், சூரபத்மனின் ஆசிரியனுமான இடும்பன் தன் மனைவி இடும்பியுடன் அருள் வேண்டி பணிந்தான். அப்போது இடும்பனிடம். இந்த இருமலைகளையும் சுமந்து பொதிகை மலையில் வைத்தால் உனக்கு பேர், புகழ், அருள் எல்லாம் கிடைக்கும் என்றார்.

பலசாலியான இடும்பன் மலைகளை தூக்க முயன்று, தோற்றான். தனக்கு ஆற்றல் தர குறுமுனியிடம் வேண்டினான். அகத்தியரும் முருகனை வழிபட்டால் ஆற்றல்  பெறலாம் என்று வழிபடும் வழியை உபதேசித்தார்.

இடும்பன் முருகனை வழிபட்டதும் பிரம்ம தண்டமே, புஜ தண்டமாக, காவுதடியாக, சுமைகளை உறிகட்டி, கவ்வும் தடியாக வந்தது, சரி எப்படி மலைகளை அதன் இருபுறமும் கட்டுவது. அதற்கு அஷ்ட நாகங்களே கயிறாக வந்தது. அஷ்ட நாகங்களைக் கொண்டு உறியாக்கி இரு மலைகளையும் காவுதடியின் இரு புறமும் கட்டித் தூக்கிய இடும்பன் சுலபமாக மலைகளைத் தூக்கிச் சென்றான்.

முருகனின் எண்ணமோ மலைகளை திருஆவினன் குடியில் மலைகளை நிலை பெறச் செய்வதாக இருந்தது. திருவிளையாடல் நிகழ்ந்தது.

வழியில் சற்று இளைப்பாற எண்ணி காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்த இடும்பன் மீண்டும் காவடியைத் தூக்க முயன்றான். ஆனால் அசைக்கக் கூட முடியவில்லை. அதைப்பார்த்த சிறுவன் ஒருவன் கேலி செய்து சிரித்தான். கோபம் கொண்ட இடும்பன், சிறுவனை அடிக்கப் பாய்ந்தான், அவனால் முடியவில்லை. மாறாக மயக்க முற்று வீழ்ந்தான்.

இடும்பனின் மனைவிக்கு வந்தது சிறுவனல்ல முருகன் என்று புரிந்தது..  மாங்கல்ய பிச்சை வேண்டினாள். முருகனின் அருளால் இடும்பன் எழுந்தான், வணங்கினான். மகிழ்ந்தார்கள். அப்போது முருகன், இடும்பா, இந்த இரண்டு மலைகளும் இங்கேயே இருக்கட்டும். இந்த இருமலையின் மேல் யாமே எழுந்தருள்வோம். மலையின் அடிவாரத்தில் நீ காவலாக இருக்கும் படிபணித்தார். பின்னாளில் ஞானப்பழம் கிடைக்காமல், ஒரு  தைப்பூசத் திருநாளில் ஆண்டிக் கோலத்தில் முருகன் எழுந்தருளியது இங்குதான்.

காவடி எடுப்பது என்பது நம் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு சுமந்து இறைவனை யாசித்தால் எதுவும் சுலபமாகும், சாத்தியமாகும் என்பதே புராணம் கூறும் உள்ளார்ந்த கருத்தாகும்.

காவடிகளில் இருபதுவகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. என்றாலும் இன்று பக்தர்களின் ஆர்வத்தால் இன்னும் அதிகமாகவே எண்ணிக்கை கூடியுள்ளது என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top