புதுக்கோட்டையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்(2023) முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (9.01.2024) பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகள் விளையாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 19.01.2024 முதல் 31.01.2024 வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
திருமயம் கோட்டை மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வினாடி வினா, உடற் தகுதிப்போட்டிகள், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் – 2023 லோகோ, சின்னம், கருத்துரு பாடல் (Logo, Mascot and Theme song of KIYG 2023) காட்சிப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் நமது புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப்பதக்கம் பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தற்சமயம் இப்போட்டிகளில் நமது வீரர், வீராங்க னைகள் அதிக அளவில் தேர்வுபெற்று பதக்கங்கள் வென்று நமது தமிழ்நாட்டிற்கு பெருமைசேர்த்திட வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா.
மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் (பொ) ஏ.ஆர்.நாகேஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், வளைகோல் பந்து பயிற்றுனர் கே.ராஜாமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.