Close
நவம்பர் 22, 2024 2:18 காலை

நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம்: முதலமைச்சருக்கு ஏஐடியுசி தொழில்சங்கம் நன்றி

தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார்

 நுகர் பொருள் வாணிப கழக தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி தொழில் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி. சந்திரகுமார் வெளியிட்டுள்ள  அறிக்கை. பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்த நெல் கொள்முதல் பணியாளர்கள் 586 பேர் பணி நிரந்தரம், நுகர்பொருள் வாணிபக்கழக பொன்விழா ஆண்டை ஒட்டி பணியாளர்கள் அனைவருக்கும்ரூ 1500 ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பிற்கு தமிழக முதலமைச்சருக்கு ஏஐடியூசி நன்றி தெரிவிக்கிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த நெல் கொள்முதல் பணியாளர்கள் 300பேர் பட்டியல் எழுத்தராகவும் 286பேர் எடையாளராகவும் ஆக 586 பேர் பணிநிரந்தரப் படுத்துவதாகவும். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக 50ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி பணியாளர்கள் அனைவருக்கும் ரூ1500 ஊக்கத்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணையும் வழங்கப்பட உள்ளதாகவும் வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் செய்திகள் வந்துள்ளன. பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதற்கும், பொன்விழா ஊக்கத்தொகை வழங்கப்பட்டதற்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிகப்பெரிய சாதனையாக நெல் கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 3.25 வழங்கப்பட்ட கூலி ரூபாய் 10 ஆக உயர்த்தியதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். இதே போன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிகின்ற மற்ற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அறிவிக்கப்படாமல் சொற்ப கூலி வழங்கப்படுகிறது. இதனையும் பரிசீலித்து அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற கூலி உயர்வு வழங்க வேண்டுகிறோம்.

மேலும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஓய்வூதியம் இன்றி இறுதி காலத்தில் சொல்ல முடியாத கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொன்விழா ஊக்கத்தொகை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நெல் கொள்முதலில் நடப்பாண்டில் மிகப்பெரிய அளவிற்கு சாகுபடி செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவு நெல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு கூடுதலாகி கொண்டே வருகிறது.தடங்கலின்றி கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுகிறோம். பிப்ரவரி மாதம் வரை மழை, பனிக்காலம் என்பதால் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது 17 சதவீதத்திற்கு மேல் அனுமதிக்கின்ற பொழுது ஈரப்பதத்திற்கான பிடித்த தொகை அரசுக்கு வருகிறது. ஆனால் தற்போது கூடுதலாக ஈரப்பதம் இருந்தாலும் 17% என்று குறிப்பிட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

அனைத்து தரப்பினர்களின் நெருக்கடிகள் காரணமாக உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியும் அதிக ஈரப்பதம் உள்ள நெல் 17 சதவீத ஈரப்பதம் என்று தான் குறிப்பிட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இது அரசுக்கு பேரிழப்பாக அமைந்து விடுவதோடு விவசாயிகளுக்கும் நெல் விற்பனையில் மிகுந்த கஷ்டத்தை அளிக்கிறது. எனவே உடனடியாக ஈரப்பதத் தளர்வு பெற்று சரியாக ஈரப்பதம் குறிப்பிட்டு கொள்முதல் செய்ய வேண்டுகிறோம்.

கொள்முதல் பணியாளர்கள் நெல் தூசி சுணையிலும் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டு நாள் முழுதும் மன உளைச்சலுடனே பணிபுரிய வேண்டிய நிலை இருக்கிறது. தவிர்க்க இயலாத குடும்ப பணிகளை கூட செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் இருந்த வார விடுமுறையையும் பறிப்பதும் , தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் கூட பணிபுரிய வேண்டும் என்று வற்புறுத்துவதும் பொருத்தமற்றது, மனிதாபி மானமற்றது.

எனவே வாரம் ஒரு நாள் விடுமுறை என்பதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுகிறோம். இதன் காரணமாக ஏதோ கூடுதலாக நெல் கொள்முதல் ஆகிவிடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றம் உருவாக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாகவும்  சி.சந்திரகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top