அறம் சார்ந்த அரசியலின் குறியீடாகத் திகழ்பவர் முன்னாள் அமைச்சர் கக்கன் என்றார் வரலாற்றுப் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தியாகசீலர் கக்கன் நினைவு நாள் சொற்பொழிவு (23.12.2022) ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்விற்கு ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்து பேசுகையில்,
சுதந்திரப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னும் தமிழக அரசியலில் நேர்மை, எளிமையுடன் வாழ்ந்து தன்னலமற்ற சேவை செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் கக்கன். அவருடைய தியாகத்தை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவரும், வாசகர் பேரவை செயலருமான சா.விஸ்வநாதன் பேசியதாவது: அறமற்ற அரசியல் பாவம் என்றார் மகாத்மா காந்தி . கக்கன் அறம் சார்ந்த அரசியலின் குறியீடாகவே வாழ்ந்தார். மதுரைக்கு வந்த காந்தியோடு மேலூர் பகுதி கிராமங்களில் பயணித்தபோது காந்தியோடு நேரடியாக பழகும் வாய்ப்பும் அவருடைய செயல்களை காணும் வாய்ப்பும் பெற்றார்.
அது அவருடைய அறம்சார்ந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. மதுரை வைத்தியநாத அய்யருடன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசம் செய்த போது ஒடுக்கப்பட்டவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உழைக்க வேண்டும் என்று தோன்றியது.
காமராஜருடன் அவருக்கேற்பட்ட தொடர்பு மேலும் அவருடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்தியது. காமராஜரின் இறுதிக் காலம் வரை அவருடனேயே பயணித்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் 22 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.
தன் சக தொண்டர்களைக் காட்டிக்கொடுக்காததற்காக கசையடி தண்டனையும் பெற்றவர். அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக செயல்பட்டபோது ஓடுக்கப்பட்டவர்களுக்கு (அரினங்களுக்கு) இடஒதுக்கீடு கேட்டு குரல் கொடுத்தவர். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, 10 ஆண்டுகள் அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
விவசாயம், உணவு, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், கால்நடை பராமரிப்பு, அரிசன நலம் இறுதியாக உள்துறை , காவல்துறைப் பொறுப்புகளைத் திறம்பட கவனித்தவர். அவர் நீர்ப்பாசனத்துறை அமைச்சகப் பொறுப்பை கவனித்த போதுதான் வைகை அணை உட்பட 10 -க்கு மேற்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
கக்கன் பிறக்கும்போது செல்வத்தோடு பிறந்தவரில்லை. பத்தாண்டுகள் அமைச்சராக இருந்து இறக்கும் போதும் ஏழை எளியவராகவே இறந்தார். கால் கடுக்க நின்று அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். ஒண்டக் குடிசையின்றி, மருத்து வருக்கு பணம் கொடுத்து நோய் போக்கும் வழியுமின்றி, வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடு மறைந்தார்.
எதையும் கொண்டு வரவில்லை. பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை மற்றும் எளிமை தவிர வேறு எதையும் அவர் விட்டுச் செல்லவும் இல்லை. மொத்தத்தில் அவர் அறம்சார்ந்த அரசியலின் குறியீடாக வாழ்ந்து மறைந்தார். இன்றைய தலைமுறை அவருடைய தீயாகத்தைப் போற்றவேண்டும்.
அவர் போன்று இந்த தேசம் பயனுற, சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நேர்மையையும், எளிமையையும், தூய்மையையும் அறம்சார்ந்த வாழ்வையும் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும் என்றார் விஸ்வநாதன்.
முன்னதாக கல்லூரி முதல்வர் தி.சந்திரமோகன் வரவேற்றார். நிறைவாக கல்லூரி துணை முதல்வர் தாரகேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு கக்கன் பற்றி வாழ்க்கைக் குறிப்பும் , நூல்களும் வழங்கப்பட்டது.