Close
நவம்பர் 24, 2024 9:59 மணி

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; நிதித்துறை செயலாளராக உதயச்சந்திரன்; உள்துறை செயலாளராக அமுதா மாற்றம்

தமிழ்நாடு

இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஸ் அதிகாரிகள் உத.யசந்திரன், அமுதா, ராதாகிருஷ்ணன்

தமிழக அரசில் நிர்வாகக் காரணங்களுக்காக துறைச் செயலாளர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தவின்படி, இதுவரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த டாக்டர் பி.செந்தில்குமார் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த பி.அமுதா உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் கே.கோபால் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த டாக்டர் மணிவாசன் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப் பணித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார் மாற்றம் செய்யப்பட்டு மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த மைதிலி ராஜேந்திரன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் ஆணையராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் ஆணையராக இருந்த எஸ். கணேஷ் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை விக்ரம் கபூர் கூடுதலாக கவனித்து வந்தார். டி.ஜெகன்நாதன் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top