தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றார் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது எவ்வளவு விமர்சனங் களை வைத்தாலும் கொஞ்சம்கூட பொருட் படுத்தாமல் தொடர்ந்து சட்ட வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறார்.
கொடைக்கானலில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசின் கொள்கைளை மறுத்து தேசியக் கல்விக் கொள்கைதான் சிறந்தது என்றும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்ற முதல்வரின் செயலை அவமதிக்கும் விதமாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் முழுக்க, முழுக்க தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தமிழக மக்களை கொச்சைப் படுத்தும் வகையிலும் பேசி வருகிறார்.
ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்தும், அவரை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்து கிறோம்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களை பிடிப்போம் என்று அமித் ஷா சொல்வது வேடிக்கையான கற்பனை. 2024 தேர்தலில் அவர்களால் ஆட்சிக்கே வரமுடியாது என்ற நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் என்ற அவரது கருத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலேயே வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கிவிடும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டில் அரசியல் சட்டம் இருக்காது, பத்திரிகை சுதந்திரம் இருக்காது. ஒதே நாடு, ஒரே மதம், ஒதே மொழி என்ற நோக்கத்தோடு அடுத்து தேர்தலே வராது என்ற சூழல் உருவாக்கப்படும்.
குஜராத்தில், உத்தரப் பிரதேசத்தில் பல மருத்துவமனைகளில் ஐசியு வார்டுகளில்கூட மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களைவிட உணவு, கல்வி, மருந்து, வேலைவாய்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு இருட்டில் இருப்பதாகக் அமித் ஷா சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?.
மக்கள் வேண்டாம் என்று சொல்கிற சேலம் எட்டு வழிச் சாலைக்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கும் ஒன்றிய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஏன் நிதி ஒதுக்கவில்லை. வட மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி வழங்கிவிட்டு, மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பான் நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தலித் மக்களை சாமி கும்பிட அனுமதி மறுத்ததற்காக கோவிலை பூட்டிய நடவடிக்கை தற்காலிக தீர்வாக இருக்கலாம்.
பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிப்பதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். வணிக நிறுவனங்களுக்கும் உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை அரசு மறுபரிசீல னை செய்ய வேண்டும். கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.
பேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.