புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (30.06.2023) அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், வெண்ணாவல்குடியில் ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் கூழையான்காடு முதல் பசுவயல் செல்லும் சாலைப் பணிக்கும், ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் செரியாளூர் ஜெமீன் முதல் இனாம் குடியிருப்பு செல்லும் சாலைப் பணிக்கும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பனங்குளம் வடக்கு முதல் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் செல்லும் சாலையினை ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் அறந்தாங்கி ஒன்றியம், அரசர்குளம் கீழ்பாதி, பாரதிநகர் பகுதியில், பகுதிநேர அங்காடியினையும், அறந்தாங்கி, பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, பெண்கள் கூடுதல் நவீன கழிவறையினையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை, அனைவரும் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், கோட்டப் பொறியாளர் (ஊராட்சி சாலைகள்) வி.செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ்.ரவி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்கராசு (பனங்குளம்), ரஞ்சித்குமார் (குளமங்கலம்), உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.