அரசு அருங்காட்சியகம், பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு பணிகளை அரசுத்துறை முதன்மை செயலர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தினை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் (22.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில், தொல்லியல் அகழாய்வுப் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உடனிருந்தார்.
பின்னர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்ததாவது:
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அரசு அருங்காட்சியகமாக புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், பித்தளை சிலைகள், கற்சிற்பங்கள், போர்கருவிகள், கத்தி, கோல், கேடயம், பீரங்கிகள், ஆபரணங்கள், ஒலியங்கள், செப்பு தகடுகள், மரச்சிற்பங்கள், நாணயங்கள், இசை கருவிகள், கல்வெட்டு பிரதிகள் உள்ளிட்ட பழங்காலத்து பொருட்கள், மன்னர் காலத்து பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் ஆகியவை நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் பறவை இனங்கள், பாம்பு இனங்கள் உள்ளிட்டவைகள் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டு, இவற்றை பதப்படுத்துவதற்கு தேவையான அமிலங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.
மேலும் அரசு அருங்காட்சியகத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையில், தொல்லியல் அகழாய்வுப் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, பொற்பனைக்கோட்டை கிராமமானது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் சார்ந்த இடங்களில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கோட்டையானது 44.88 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப்பகுதியும் உள்ளது.
இவ்வாழ்விடப்பகுதியின் காலமானது இரும்பு காலத்தில் தொடங்கி பிற்காலம் வரை தொடர்கிறது. இப்பகுதியில் இருந்து இரும்புக்கால ஈமச்சின்னங்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், வரலாற்றுக்கு முந்தைய செங்கற்கள் கண்டறியப்பட்டன.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021ம் ஆண்டு முனைவர் இனியன் தலைமையில் அகழாய்வு மேற்கொள் ளப்பட்டது. இவ் அகழாய்வில் தமிழி எழுத்து பொறிப்பு களைக்கொண்ட பானை ஓடுகள், சதுரங்க ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், எலும்பு ஆயுதங்கள் மற்றும் வட்டச் சில்லுகள் கண்டறியப்பட்டன.
இச்சிறப்பு வாய்ந்த பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வுப் பணியினை 20.05.2023 அன்று சட்டத்துறை அமைச்சர் அவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை இயக்குநர் ஆகியோர் தலைமையில், நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
இப்பணிகளின் மூலம் தற்போது வரை 15 குழிகள் தோண்டப் பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வுக் குழிகளானது 5 × 5 மீட்டர் அளவில் தோண்டப்படும் A1, B1, C1, D2, H2, P3, P4, P5, ZB1, ZL5, ZA1, ZA2, XA1, YA1, YA17, YS49, YS50 ஆகிய குழிகலில் 482 தொல்பெருட்களும், பல்வேறு வகையான பானை ஓடுகளும், செங்கல் கட்டுமானங்களும் கிடைத்துள் ளன என சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) ஞானசேகரன், தொல்லியல்துறை உதவி இயக்குநர் (பொ) தங்கதுரை, மாவட்ட சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ.) பி.முத்துச்சாமி, உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) தி.அனிதா, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூ.பொ.) தி.பக்கிரிசாமி, செயல் அலுவலர் சந்திரசேகரன், ஊராட்சிமன்றத் தலைவர் (வேப்பங்குடி) ராஜாங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்