நாள்தோறும் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சமமேளனத்தின் 15 வது மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 15 வது மாவட்ட மாநாடு தஞ்சாவூர் கீழ ராஜவீதி ஏஐடியூசி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் எஸ். தனசீலி தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டு கொடியினை மாநில துணைச் செயலாளர் மு.கண்ணகி ஏற்றி வைத்தார். மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி வரவேற்புரை ஆற்றினார்.மாநகர செயலாளர் கே.கல்யாணி அஞ்சலி உரையாற்றினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாநில செயலாளருமான பி. பத்மாவதி மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ம. விஜயலட்சுமி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட துணை செயலாளர் ஏ.எஸ்தர்ஜெயலீமா, மாநில குழு உறுப்பினர் த.கண்ணகி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி மாநாட்டினை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்: நாள்தோறும் உயர்ந்து வருகின்ற பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வினால் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படுகின்ற அரிசி மளிகை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பண்டங்கள் விலை நாள்தோறும் ஏறி வருகிறது.
இதனால் அன்றாடம் உழைக்கின்ற ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதை கவனத்தில் கொண்டு உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்தில் காலை மாலை நகர்புற பேருந்து வசதிகள் இல்லாததால் கிராமங்களில் இருந்து நாள்தோறும் நகரத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்ற பெண்கள், பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளா கின்றனர்.
ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாத நிலையில் முதல்வரின் பெண்கள் இலவச பயண சேவை கேள்விக்குறியாக்கப் படுவதை கவனத்தில் கொண்டு கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பாலியல் வன்கொடுமைகள் கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக இருந்தும், நாடு முழுவதும் குழந்தைகள், சிறுமிகள் பெண்கள் மீது நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த போர் கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பழைய நீதிமன்ற கட்டிட வளாகத்தை புதுப்பித்து , அரசு மகளிர் தங்கும் விடுதியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தஞ்சை மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #செய்தி துரை .மதிவாணன்#