போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளுக்கு நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி, அக்டோபர் 30 -ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ ஐ டி யூ சி ஓய்வூதியர்கள் கூட்டம் இன்று காலை தஞ்சாவூர் கீழ ராஜ வீதி மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் துணைத் தலைவர் கே.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை.மதிவாணன் மாவட்ட, மாநில முடிவுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் பி.அழகிரி, எஸ்.மனோகரன், பொறியாளர் முருகையன், அருள்தாஸ், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, இருதயராஜ், ரெஜினால்டுரவீந்திரன், ஞானசேகரன், சாந்தி சுந்தர்ராஜன், சித்ரா சிவனேசன், சிவகுமார் ராதாகிருஷ்ணன், குணசேகரன் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் டி.தங்கராசு நன்றி கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுமார் 90 ஆயிரம் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் நீண்ட கால கோரிக்கையான பிஎஃப் டிரஸ்ட் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி பழைய புதிய உயர்வுகளை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.
அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் வாரிசு பணிக்கு அவரவர் கல்வித் தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு முதல்வர் உரிய அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற 30.10.2023 ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைவரும் சங்க பேதமின்றி பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.