வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையடுத்து கடல்பகுதியில் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும் கடல்காற்றும் பலமாக வீசி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் வலுவடைந்து மூன்று நாள்கள் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரைக்கு திரும்புமாறும், புதிதாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரித்துள்ளது.
கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ராணி அபாக்கா மூலம் வெள்ளிக்கிழமை முதல் வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் ஒலிபெருக்கி மூலம் புயல் குறித்து விளக்கமாக எச்சரிக்கை செய்து உடனடியாக கரைக்கு திரும்புமாறு காவல் படையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரேடியோ அலைவரிசைகள் மூலம் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படப் போகும் அபாயங்கள் குறித்து மீனவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச அரசுக்கு கடலோரக் காவல் படை தகவல் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் ரோந்துக் கப்பல்கள்..
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய கடலோரக் காவல் படை கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலைமையைக் கருத்தில் கொண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்பைத் தடுப்பதற்கும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் கடல்பகுதியில் ரோந்து ஹெலிகாப் டர்களுடன் கூடிய கடலோரக் காவல் படை கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ள பகுதியில் வணிகக் கப்பல்களை போதிய பாதுகாப்பான வழித்தடங்களில் மாற்றிக் கொண்டு செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான முதன்மையான ஏஜென்சியாக இருக்கும் கடலோரக் காவல்படை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையொட்டி எழும் எவ்வித பிரச்னைகளையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.