Close
நவம்பர் 24, 2024 12:07 காலை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்திக்கு வரவேற்பளித்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர்

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த ‘முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்திக்கு வரவேற்பளிக்கு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் வட்டம், லெனாவிலக்கு பகுதியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

இதில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,   சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் (13.11.2023) வரவேற்று முத்தமிழ்த்தேரின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்தமிழறிஞர் கலைஞர்  நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக  தமிழ்நாடு முதலமைச்சரால்  12 குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதில், ‘எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறை யினருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மை யினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் ‘முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி 4.11.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி அனைத்து மாவட்டத்திற்கு சென்று கடைசியாக 04.12.2023 அன்று சென்னையில் முடிவடைகிறது.

புதுக்கோட்டை

இந்த வாகனம் ‘எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்” என்று முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர்  பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட் டுள்ளது. இவ்வாகனத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ‘முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப் படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படமும் தொடர்ந்து திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. பேனா வடிவிலான இந்த வாகனகத்தின் பின்புறம் இயந்திரத் தினால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட் டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்று பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
கலைஞர் உருவச்சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர்

வாகனத்தின் உள்ளே, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுர இல்ல உள்அமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட் டுள்ளது. மேலும் உள்ளே அஞ்சுகம் அம்மாள் அவர்களின் உருவச்சிலையும் அதன் அருகில் முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்துகளுக்கு வடிவம் கொடுக்கும் அவரது படைப்புகளும், அவரது பன்முகத் தோற்றத்தினை விளக்கும் ஒலி, ஒளி அமைப்பும் உருவாக்கப் பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர்  எழுத்துகளால் உயிர்ப்பெற்ற கவிதை, கட்டுரை, புதினங்கள், காப்பியங்கள் போன்றவற்றை கைப்பேசி வாயிலாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் QR Code Scan மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது.

இந்த அலங்கர ஊர்தியானது திருமயம் வட்டம், லேனாவிலக்கு மற்றும் புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிடும் வகையில், காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.சு. கவிதைபித்தன்,

அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top