வழக்கறிஞர் சிவகங்கை இராமச்சந்திரனார்- சமூகநீதிக்கான முன்னோடி முழக்கம்…
மாணவர்களின் பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட சாதிய நச்சுக்கள் வண்ணக்கயிறுகளாக வடிவம்பெற்று கொலை பாதகம்வரை சென்று, தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தேறியதை அனைவரும் அறிவோம். அந்நாட்களில் வண்ணக்கயிறுகளுக்கு எதிராக கண்டனங்கள் வரிசை கட்டின. ஆனால் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் சாதி, மத அடையாளத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற குறியீடுக ளுக்கு எதிராக ஒரு குரல் வீரியமாக ஒலித்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணா அவர்களால் சநாதனத்தை எரிக்க வந்த நெருப்பாறு’ என்று புகழப்பட்ட சுயமரியாதை வீரர் சிவகங்கை எஸ். இராமச்சந்திரனார் ஆவார். அவர் அக்டோபர் 10, 1884 -இல் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள ஆத்திக்காடு- தெக்கூர் கிராமத்தில் பிறந்தார்.
சிவகங்கை இராமச்சந்திரனார் அவர்கள் தனது பள்ளிக்கல்வியை சிவகங்கையிலும் உயர்கல்வியை திருவனந்தபுரம் மகாராஜா உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்துவிட்டு மதுரையில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
சில ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊருக்குத் திரும்பி, சிவகங்கை சமஸ்தான வழக்கறிஞராகவும் எளியோரின் சட்ட நியாயங்களுக்காக வாதிடும் மக்கள் வழக்கறிஞராகவும் செயலாற்றினார்.
அவர் மாணவப் பருவத்திலிருந்தே சுயமரியாதை இயக்கத்தின் மீது நாட்டமுடையவாக இருந்தார். சமூக இயக்கத்தை நுட்பமாக உற்று நோக்கத் தொடங்கினார். பிராமணரல்லாதார் இயக்கம் தொடங்கப்பட்டவுடன் அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டப் பிரதிநிதியாக வளர்ந்தார். சுயமரியாதை இயக்கக் கருத்துகளை பாமர மக்களும் புரியும்படி எடுத்துரைக்கும் நட்சத்திரப் பேச்சாளராக மிளிர்ந்தார். சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்ட மாநாடு, ஈரோடு மதுவிலக்கு மாநாடு போன்ற நிகழ்ச்சிக ளுக்கு அவரே தலைமை வகித்தார்.
1929 -இல் செங்கல்பட்டு நகரில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாடு, பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர் அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை விடுவிக்கவும் சாதி, மதப் பிளவுகளை வெளிப்படுத்தக்கூடிய குறிகளை அணியக் கூடாது என தமிழ்நாட்டு மக்களை வலியுறுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் இராமச்சந்திரனார் ஆவார். அந்த வகையில் சாதி வாலை ஒட்ட நறுக்க முனைந்தவர் அவர்.
இனி யாரும் என்னை ‘சேர்வை’ என்று சாதியப் பின்னொட்டோடு அழைக்கக்கூடாது என்று கறாராக அறிவித்தார். அம்மாநாட்டின் தலைவரான சௌந்தர பாண்டியனார் அவர்களையும் ‘நாடார்; பட்டத்தைத் தூக்கியெறியக் கேட்டுக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் இந்தத் தீர்மானம் சமூக வளர்ச்சிப் போக்கில் முன்மாதிரியானதாக இன்றும் பார்க்கப்படுகிறது.
சிவகங்கை நீதிமன்றத்தில் பிராமணர்களுக்கென தனியாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பனையைப் போட்டுடைத்தார். மக்களின் சுயமரியாதை உணர்வுக்கு இடர் நேரும் ஒவ்வொரு முறையும் சினங்கொண்ட வேங்கையாய் சீறிப்பாய்ந்தார்.
இராமச்சந்திரனாரின் சிந்தனை வளத்தையும் களச்செயல் பாட்டையும் அறிந்த தந்தை பெரியார், தாம் சந்திக்கவரும் தகவலைக் குறிப்பிட்டுக் கைப்பட ஒரு கடிதம் எழுதி இராமச்சந்திரனாருக்கு அனுப்பினார். அதன்படி சிவகங்கை நகருக்கு வருகை தந்து அவரின் இல்லத்தில் உணவருந்திவிட்டு நீண்டஉரையாடினார்.
மேலும் இராமச்சந்திரனாரை ‘என் தோழர், ‘எனது வலதுகரம்’; என்றே பெருமையோடு விளித்தார்;. தந்தை பெரியாரும் இராமச்சந்திரனாரும் இணைந்து காரைக்குடி, சிவகங்கை முதலான பகுதிகளில் நடந்த கட்சிக்கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1929 -இல் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், மக்கள் அன்றாடம் புழங்கும் சாலை, குளம், கிணறு போன்ற பொதுவெளிகளில் சாதியப் பாகுபாடுகள் நிலவுவதைக் கண்காணிக்கவும் சமத்துவத்தை நிலைநாட்டவுமென ஒரு குழு நியமிக்கப் பட்டது.
அதில் தந்தை பெரியார், டபிள்யு.பி.ஏ.சௌந்திரபாண்டியன், ஜெ.எஸ்.கண்ணப்பர், கு.இராமநாதன், ஈ.வே.ரா.நாகம்மாள், கார்குடி சின்னய்யா ஆகிய ஆளுமைகளோடு சிவகங்கை இராமச்சந்திரனாரும் இடம் பெற்றார்.
1929, ஆகஸ்ட் – 11 அன்று காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட முதலாவது ஆதிதிராவிடர் மாநாட்டில் உரையாற்றிய இராமச்சந்திரனார், காரைக்குடி நகருக்கு மத்தியிலும் அருகாமையிலும் அமைந்துள்ள அரசாங்க இடங்களை ஆதிதிராவிடர்களுக்கு குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள விவசாய மில்லாத தரிசு நிலங்களை நிலமற்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு குறைந்த தீர்வைக்குக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரையும் சிவகங்கை மன்னரையும் மாநாட்டுத் தீர்மானத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.
சுயமரியாதை இயக்கம் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மன்றத்தில் நடைமுறைப்படுத் துவதில் முன்னணியாய் விளங்கினார். அந்தவகையில் அவர் சுயமரியாதை வீரருக்குரிய இலக்கண கர்த்தா.
தேசத்திற்கான உண்மையான விடுதலை சமூக முன்னேற்றத் திலிருந்தும் சமுதாய சீர்திருத்தத்திலிமிருந்து தான் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் 1930 -இல் நீதிக்கட்சி ஆட்சியமைத்து திவான் பகதூர் சித்தூர் பி.முனுசாமி அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, அமைச்சரவையில் பங்கேற்க வந்த அழைப்பை, மக்கள் தொண்டிற்கு தடையாக இருக்குமென்று கருதி மறுத்துவிட்டார்.
மேலும் தான் வகித்த குறைந்த பட்ச பதவிகளைக்கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கிடைத்த நல் வாய்ப்பாகக் கருதினார். அவர் இராமநாதபுரம் மாவட்ட தேவஸ்தானக் குழுத்தலைவராக இருந்த சமயத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் ஆலயத்தின் நுழைவதற்கான உரிமையைப் போராடிப் பெற்றுக் கொடுத்து, சமூகநீதிக் காவலராகப் போற்றப்பட்டார்.
சிவகங்கை அருகிலுள்ள கிராமத்தில் பட்டியல் சாதியினரின் வீடுகளைத் தீயிட்டு கலவரம் செய்ய முற்பட்ட அவரின் சொந்தச் சாதியினரின் ஆதிக்கப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரணாக நின்றார். அவர்களுக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிராக துப்பாக்கி தூக்கவும் அணியமாக இருந்தார்.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் ஒரு துளி கண்ணீர் சிந்தினால் கூட, நீங்களும் நானும் சேர்ந்து பல துளிகள் இரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என சாதியவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது மட்டுமல்லாமல், இராமநாதபுரம் மாவட் டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களையவும் குறைபாடுகளைப் போக்கவும் அரும்பாடுபட்டார்.
சாதியப் பிரச்சினைகளின்போது எத்தகைய நிலைப்பாடு களை எடுக்க வேண்டும் என்பதற்கு இராமச்சந்திரனாரின் களச்செயல்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணம். தற்காலத்தில் பயணிக்கும் முற்போக்குவாதிகளும் திராவிட இயக்கத்தவர்களும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.
அவர் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காகப் பல்வேறு வழக்குகளில் ஆஜரானார். நீதிமன்றங்களில் தன் வாதத் திறத்தால் பிரபலமான வழக்கறிஞர்களை எதிர்த்து வாதிட்டு வென்றார். அதனால் சொந்தச் சாதியினரின் எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானார். ஆனால் அதற்காக அவர் கொஞ்சமும் கவலைப்பட்டாரில்லை.
அல்லும் பகலும் இயக்கத்திற்காகவே உழைத்தார். தனக்கு வந்த வருமானத்தையெல்லாம் அதற்காகவே செலவழித்தார். இது குறித்து தன் மனைவி கவலையோடு கேட்டபோது, “நம் தமிழ்ச்சமுதாயத்தில் கணவனை இழந்த பெண்மணிகள் ஆப்பம், இட்லி சுட்டு விற்றுத்தான் வாழ்கிறார்கள். அதேபோல் நீயும் வாழக் கற்றுக்கொள். நான் சுயமரியாதை இயக்கத் திற்கு என்னைக் கொடுத்துவிட்டேன்” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
தன் கொள்கைப் பயணத்திற்கு முன் குடும்பம் துரும்பாய்த் தெரிந்தது அவருக்கு. ஒருமுறை மதுரையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான வைத்தியநாதய்யர் சிவகங்கை இராமச்சந்திரனாரின் வாதத் திறமையையும் நெஞ்சத் துணிவையும் பார்த்து வியந்து, சுயமரியாதை என்ற சிறு துண்டைத் தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு நீதிமன்ற வளாகக் கூட்டத்தில் பகிரங்க வேண்டு கோள் விடுத்தார்.
அடுத்தநாள் மிகப் பெரிய கூட்டமொன்றைக்கூட்டி நான் காங்கிரஸ் கட்சிக்கு வரத் தயார்நீங்கள் சொல்வது போல் சுயமரியாதை சீர்திருத்தம், பகுத்தறிவு என்ற இந்தச் சிறு துண்டைத் தூக்கி எறியவும் தயார். அதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய விலை மிகச் சாதாரணமான ஒன்றுதான். அது துண்டு அளவுக்குக்கூடக் கிடையாது.
சிறு ஆறு நூல்கள்தான். வருணாசிரமத்தின் உறைவிடமாக உங்கள் மார்பிலே தொங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சிறு பூநூலைக் கழற்றி எறிந்துவிடுங்கள். உங்களோடு வந்துவிடுகிறேன் என்று வைத்தியநாதப்பருக்கு பதிலையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளித்தார்.
வைத்தியநாதய்யரிடமிருந்து பதிலேதுமில்லை. பூநூலை அறுத்தெறிய அவர் தயாராக இல்லை. அதன் பிறகு வைத்தியநாதப்பருக்கும் இராமச்சந்திரனாருக்கும் நடந்த உரையாடல்கள் மிகவும் சுவாரசியமானவை.
“ஏ தாழ்ந்த தமிழகமே என்று நீ சமூக நீதி பெறுவாய்? ஏ வீழ்ச்சியுற்ற தமிழகமே என்று நீ சமநீதி பெறுவாய்? ஏ ஒடுக்கப்பட்ட தமிழகமே என்று நீ இனவுணர்வு கொள்வாய்? ” என்று தன் இலட்சிய முழக்கமிட்டார். அவர் 1916 -இல் எழுப்பிய இம்முழக்கங்கள் நூற்றாண்டுக் கடந்த இன்றைய தமிழகச் சூழலிலும் அப்படியே பொருந்திப் போவதாக இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.
சாதிமறுப்புக் கொள்கையில் ஆழமான நம்பிக்கையுடை யவாக விளங்கினார் என்பதை அவரின் உரைவீச்சுகள் உறுதிப்படுத்துகின்றன. “நாம் சுவாசிக்கும் காற்றிற்கு மதம், சாதி இல்லை. நாம் அருந்தும் நீருக்கு மதம், சாதி இல்லை. நாம் உண்ணும் உணவிற்கு மதம், சாதியில்லை. நாம் உடம்பில் ஓடும் இரத்திற்கு மதம், சாதி இல்லை. நாம் கேட்டு மகிழும் இசைக்கு மதம் சாதி இல்லை.
மத பேதம் கொள்ளாதவன் மனிதசாதி மற்றவர்கள் எல்லாம் கீழ்சாதி” என்று தமக்கேயுரிய பாணியில் மதவாதிகளையும் சாதியவாதிகளையும் கடுமையாகச் சாடினார்.
அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது அவர் படுக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைப் பார்த்த தோழர் ஒருவர், இப்ப இது எதுக்கு என்று வினவிய போது,எந்த நிமிடத்திலும் அநீதி நடக்க விடமாட்டேன் என்று கூறினார். அதுவே அவரின் கடைசிப் பேச்சாக அமைந்துவிட்டது காலத்தின் கொடூரம்.
இராமச்சந்திரனார் சந்தித்த களப் போராட்டங்கள் எண்ணற் றவை. மக்களின் குரலாகவே அவர் வாழ்ந்தார். சாதி ஒழிப்பு, சாதி மறுப்பு, சடங்கு சாஸ்திர மறுப்பு, சுயமரியாதை, சமூகநீதி, மொழி, இனப்பற்று எனத் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் எள் முனையளவும் விலகாது பயணித்தார். அவர் ஏற்றி வைத்த சுயமரியாதைச் சுடரை அணையாது காக்க வேண்டியது சமூகமாற்றத்தை விரும்பும் அனைவரின் கடமை.
நன்றி:தங்க.செங்கதிர்-ஆசிரியர்-மானுடம்.