Close
ஜூலை 7, 2024 9:58 காலை

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 944 மனுக்கள்

சிவகங்கை

திருப்பத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ர மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு பெறும் முகாம்

தமிழ்நாடு முதலமைச்சரின்  “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் பேரூராட்சியில், நடைபெற்ற சிறப்பு முன்னோடி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பார்வையிட்டார்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (22.11.2023) ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முன்னோடி முகாமினை, பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலர்களை கொண்டு நேரடியாக மனுக்களைப்பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது  உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதில், மக்கள் தொடர்பு முகாம் போன்றவைகளை நடத்துவது மட்டுமன்றி, வாரம்தோறும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் வாயிலாகவும், மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பிரிவை ஏற்படுத்தி அதன் வாயிலாகவும், குறிப்பாக முதல்வரின் முகவரி ஆகியவை களின் மூலம் மனுக்களைப் பெற்று தகுதியுடைய நபர்களுக்கு உரிய பயன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளார்கள்.

அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய திட்டமான “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என, மொத்தம் 13 துறைகள் இதில் பங்கேற்கவுள்ளன.

இத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக இம்முகாமினை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 7 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 பிற நகர் பகுதிகளில் புதன்கிழமை (22.11.2023) மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெறுகிறது.

அதில், சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்துார் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியில், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் காலை 9. மணியளவில் தொடங்கப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை  நடைபெற்றது.

இதில், மேற்கண்ட துறைகள் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஏதுவாக, அனைத்து ஏற்பாடுகளும் சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக மேற் கொள்ளப்பட்டது. அதன்படி, பல்வேறு துறைகள் பங்கேற்றுள்ள “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமின் வாயிலாக மொத்தம் 944 மனுக்கள் இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.

இதுபோன்று, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மனுக்களை அளித்து, தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை,  திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, தனித்துணை ஆட்சியர் (பொ) ஜி.சரவணப் பெருமாள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த், திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top