அரசின் உறுதுணையுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி அளிக்க முயற்சி செய்வோம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன்.
கந்தரவகோட்டை ஒன்றியம், வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வார விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு உலக மரபு வார விழா குறித்து பேசியதாவது:
உலகின் பல்வேறுபட்ட மனித நாகரிகங்கள் இருந்த போதிலும் தனித்தனியான பண்பாட்டு கூறுகள், நம்பிக்கைகள், மொழி என பரவியிருக்கும் நிலையில் அனைத்து மக்களும் தத்தமது பாரம்பரிய பெருமிதங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளவும் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது .
வெள்ளாளவிடுதி பள்ளி மாணவர்கள் தொல்லியல் ஆய்வுத் தேடலில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தோடு இணைந்து கந்தர்வகோட்டை அருகே மங்களாகோயிலில் கண்டுபிடிக் கப்பட்ட சமணர் சிற்பம் குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் நமது பகுதியின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அரசின் துணையுடன் விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி வழங்கிட முயற்சி செய்வோம்.
நம் பண்டைய மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களை புதுக்கோட்டை அருங்காட்சி யகத்தில் உள்ளது. அதே போன்று நமது பகுதியிலும் ஏராளமான பொருட்கள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கிறது அவற்றை அடையாளம் கண்டு பாதுகாப்பது நமது கடமை. புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் துறையில் பல்வேறு வகையான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை பகுதியில் தொல்லியல் அடையாளங்களாக சித்தன்னவாசல் ஓவியம், திருமயம் கோட்டை,பொற்பனைக் கோட்டை அகழாய்வு, உள்ளிட்ட பகுதிகளை மாணவர்கள் சுற்றுலா சென்று பார்க்க வேண்டும் இவ்வாறு பார்க்கும் பொழுது நம்முடைய முன்னோர்களுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன், கந்தரவக் கோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் யோவேல், சத்தியமா, ஜெஸட்டின் திராவியம், தமிழ்மாறன் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் ரசியா, ஆசிரியர் பயிற்சி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.