மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் க.சதாசிவம் எதிர்கால பணிகள் குறித்தும், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் மாநில செயற்குழு முடிவுகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:. மாவட்டம் முழுவதும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவது. 3000 க்கும் அதிகமான உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது. வட்டார மாநாடுகளை டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் நடத்துவது. மாவட்ட மாநாட்டை டிசம்பர் 30 -ஆம் தேதிக்குள் நடத்துவது. மாநில உபகுழு மற்றும் மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் அறிவியல் பிரசாரப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது. புதுக்கோட்டையில் செயல்படும் வகையில் தமிழக அரசு புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பாலித்தீன் பைகள் பயன்பாட்டைக் குறைத்து காகிதப் பைகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார பணிகளை மேற்கொள்வது. தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளியிட வேண்டும் .
சென்னையிலிருந்து செங்கோட்டை வரை புதுக்கோட்டை வழியாக வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் செல்லும் சிலம்பு விரைவு ரயிலை தினந்தோறும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபாலன், ராமதிலகம், கமலம், ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட இணைச்செயலாளர் க.ஜெயராம் வரவேற்றார். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.