மக்கள் விரோத- தொழிலாளர் விரோத மத்திய ஆட்சியை அகற்ற வேண்டுமென புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி தஞ்சையில் இன்று ஏழு இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.
பாஜக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளில் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது,பெட்ரோல், டீசல் ,எரிவாயு விலை உயர்வுகளும், அன்றாடம் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மளிகை, காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியா வசிய உணவு பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது.
நாட்டில் தொழில் உற்பத்தி முடங்கிப் போய் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை .பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாஜக அரசை விமர்சனம் செய்யும் நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகி றார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
கருத்துரிமை எழுத்தறிவு பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன . முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கும் மக்களின் வரிப்பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.
வங்கிகளில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது . டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை.
போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்கள் தொழிற்சங்க சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தி அமைக்கப் பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப் படுகிறது. மொத்தத்தில் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத ஆட்சியாக ஒன்றிய அரசு இருக்கிறது.
நாட்டின் இறையாண்மையையும், சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும், தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை மீட்டுடெடுக்கவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக தோற்கடிப்போம்.
இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் சார்பில் ஜனவரி 7 -ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பேரணி மாநாட்டை விளக்கி புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் தொடங்கப்பட்டது.
சுந்தரம் பெயிண்ட்,மருத்துவக் கல்லூரி, பாலாஜி நகர், சிவகங்கை பூங்கா, கரந்தை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு இரவு ஏழு மணி அளவில் தஞ்சாவூரில் ரயிலடி முன்பாக பிரசாரம் நிறைவு பெற்றது.
பிரசார இயக்கத்திற்கு புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் டி.தாமஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.தேவா, ஆர்.லட்சுமணன், ஆர்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட இணை செயலாளர் வி.மணலிதாஸ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவா பிரசாரத்தை தொடக்கி வைத்தார். மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் பிரசாரத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
பிரசார இயக்கத்தில் ஏ ஐ டி யூ சி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை . மதிவாணன், திமுக இலக்கிய அணி நிர்வாகி அண்ணாதுரை, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் அ.யோகராஜ், மாநகர செயலாளர் கே.தமிழ் முதல்வன்.
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி பசுபதி போராளி, மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே . மூர்த்தி,எஸ் டி டி யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஏ.காதர், தொமுச ஆட்டோ சங்க மாநகரத் தலைவர் ஆர்.ராஜா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள். எம்.சபா மணி,ஜெ. பிரபு, ஆர்.சுரேஷ், எஸ்.மணி வாசன், எம்.பழனி, பி.மாரிமுத்து, எஸ்.செந்தமிழ்ச்செல்வன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகி சாமிநாதன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழி நடத்தினார். முடிவில் டி.செல்வபதி நன்றி கூறினார். முன்னதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு சார்பில் மாநில நிர்வாகி லதா தலைமையில் கலை நிகழ்ச்சி நடத்தினார்.