Close
ஜூலை 7, 2024 9:54 காலை

பொங்கல் சீர்வரிசை அரசின் தாய்வீட்டு சீதனம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

புதுக்கோட்டை

திருமயத்தில் பயனாளிக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

பொங்கல் சீர்வரிசை தமிழக அரசின் தாய்வீட்டு சீதனம் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள திருமயம் தாலுகா விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 – ரொக்கம், முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கி மேலும் அவர் பேசியதாவது:

பொங்கல் விழாவை தமிழர்கள்உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்கிற ஒரே நோக்கில் தாய் வீட்டு சீதனம் போல  தமிழக முதல்வர் குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 -ரொக்கம் வழங்க உத்தரவிட்டுள்ளார்

திருமயம் தாலுகாவில் 50,174 பேருக்கும், பொன்னமராவதி தாலுகாவில் 29,125 பேர் உள்பட மொத்தம் 79,289 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் தலா ரூ.1000 தொகையும் வழங்கப்படவுள்ளது.

மிக்ஜாம் புயலால் வடக்கு மாவட்டங்களிலும், பருவ மழையால் தென் மாவட்டங்களிலும் பலத்த சேதங்களையும், பல்லாயிரம் கோடிக்கு இழப்பை தமிழ்நாடு அரசு சந்தித்தது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருகிறபோதும்,. வேறு எந்த அரசும் இதைச்செய்திருக்குமா என்பது சந்தேகம் தான். காரணம் இந்த அரசு மக்களுக்கான அரசாக இருப்பதுதான்.

தொழில்துறை, விவசாயம், விளையாட்டு,, கல்வி ஆகிய துறைகளில் செய்துவரும் புரட்சி செய்து இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

 ஒன்றிய அரசு தமிழக அரசை வஞ்சிக்கிறது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஒரு பார்வை, தமிழ்நாட்டுக்கு ஒரு பார்வையும் உள்ளதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றிய அரசுக்கு கொடுப்பதைவிட நமக்கு திரும்பத் தருவது மிகவும் குறைவு.

இந்நிலையில், வரும் மக்களவைத்தேர்தல் மூலம் நாம் பாடம் புகட்ட வேண்டும்.  மக்களவைத்தேர்தலில் 40 -க்கு 40 என்ற வெற்றியை பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். ஒன்றிய அரசில் பெரிய மாற்றம் ஏற்படுத்தி, நமக்கு இணக்கமான அரசு அமைவதை நூறுசதவீத வெற்றி மூலம் உறுதி செய்ய வேண்டும் .

தமிழ்நாடு அரசு இல்லாதவர்களை இருப்பவர்களாக ஆக்குவதை லட்சியமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

நிகழ்வில், திருமயம் வட்டாட்சியர் எஸ். புவியரசன், ஊராட்சித் தலைவர் எம். சிக்கந்தர், திமுக ஒன்றிய செயலாளர்கள் அழகுசிதம்பரம், கணேசன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப.துரைராஜ், உறுப்பினர் ஜான்பீட்டர், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top