புதுக்கோட்டை தமிழச்சங்கம் நடத்திய தமிழர் மரபுத்திரு விழா தமிழ் சங்க தலைப்பொங்கல் விழாவாக (12.01.2024 ) வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை தமிழச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தலைப் பொங்கல் விழாவிற்கு மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாண்பமை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ. சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டைத் தமிழச்சங்க தலைப்பொங்கல் விழாவைக் காண்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நான்குபேர் விழாவில் பங்கெடுத்து உரியடித்தல், பம்பரம் விடுதல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
விழா குறித்து அவர்கள் கூறும்போது: இந்தியாவிற்கு வந்து நாங்கள் கலந்து கொள்ளும் முதல் விழா இந்தப் பொங்கல் விழாதான். எங்களை வரவேற்று பண்பாடு மாறாமல் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை வழங்கினீர்கள். இந்த நாள் எங்கள் வாழ்நாளி;ல் மறக்க முடியாத நாளாகும் என்று குறிப்பிட்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்ததோடு பாரம்பரிய விளையாட்டுகளான உரியடித்தல் மற்றும் கிட்டி புல் ஆகிய விளையாட்டுகளை விளையாடினர்.
விழாவில் மறக்கப்படும் பாரம்பரிய விiளாயட்டுகளான இளவட்டக்கல், உரியடி, கயிறு இழுத்தல், பச்சைக்குதிரை, பல்லாங்குழி, தாயம், பரமபதம் கல்லாங்காய் ஆகிய விளையாட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வழங்கப்பட்டது. கோலப்போட்டி, இளவட்டக்கல் மற்றும் உரியடித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் மற்ற எல்லா போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் கவிஞர்கள் சிகரம் சதீஷ், பீர்முகமது உள்ளிட்ட தமிழ்சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள் சாமி.சத்தியமூர்த்தி, மு.ராமுக்கண்ணு, ரவிச்சந்திரன், பேராசிரியர்அய்யாவு, அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், யோகாபாண்டியன், பள்ளி கல்லூரி மாணவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை கவிஞர் மகாசுந்தர், பேராசிரியர் ராஜ நாராயணன் தொகுத்து வழங்கினர். புதுக்கோட்டைத் தமிழச்சங்கம் தொடங்கி முதல் நிகழ்வாக அமைந்த தலைப்பொங்கல் விழா அனைவரது பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது.