ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமையை பெற்று தர வேண்டுமென வலியுறுத்தி உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் 15 -ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழத்திற்கான போராட்டத்தில் சிங்கள இனவெறி அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் வாழ்விடங்கள் ,கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன,
தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர், சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், ரசாயன குண்டுகளை போட்டு தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர்.
இதை கண்ட மனம் பொறுக்காத சென்னை பத்திரிகையாளர் முத்துக்குமார், ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், சிங்கள அரசின் இனவெறியை, ஈழத் தமிழர்களை அழிக்கின்ற சிங்கள அரசின் பயங்கரவாத போக்கை சர்வதேச உலகத்திற்கு தெரியப்படுத்தவும், தடுத்து நிறுத்தவும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை வலியுறுத்தி ஈழத் தமிழர்களை பாதுகாப்போம், தமிழீழம் வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் கடந்த 2009 ஜனவரி 29 -ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளித்து இன்னு.யிரை தியாகம் செய்தார்.
அவரை தொடர்ந்து ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்கள் அரசியல் உரிமை அங்கீகரிக்க வலியுறுத்தி லண்டன் முருகதாஸ், மலேசியாவின் ராஜா, பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 19 பேர் தீக்குளித்து தியாகம் செய்தனர்.
இவர்களது தியாகங்களை போற்றும் வகையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் இன்று காலை 11 மணிக்கு இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் நினைவேந்தல். நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலகத்தமிழர் பேரவைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார்.
இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மக்கள் கலை இலக்கியக் கழக எழுத்தாளர் சாம்பான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜோசப், தமிழ் தேச மக்கள் முன்னணி நிர்வாகி ஆலம்கான்,
சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு பேரவை சாமிநாதன், ஏ ஐ டி யு சி பி.அப்பாதுரை, சமூக ஆர்வலர்கள் விசிறி சாமியார் முருகன், ஆசிரியர் ஓய்வு லூர்துசாமி, பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிவா, வீரமணி ,விஜய் ,பாலா ஆல்பர்ட்,சாமி ,பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கடந்த 2009 போராட்டத்திற்கு பிறகு முற்றிலுமாக ஈழத் தமிழர் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன, ஈழத் தமிழர்கள் வாழ்விடங்களில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும், தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும்.
ஐநா சபையும்,இந்திய அரசும் அளித்த நிதி உதவிகள் ஈழத் தமிழர்கள் வாழ்வாதாரர்களுக்கு பயன்படுத்தும் வகையில் செலவிட வேண்டும், ஈழப் போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்,
தமிழர்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரித்து ஐநா மன்றமும், இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழவும், அரசியல் உரிமைகள் பெறவும், தமிழீழம் பெறுவதற்கான போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் துணைநிற்போம் என நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது.