Close
நவம்பர் 24, 2024 10:03 காலை

அகில இந்திய வேலை நிறுத்தம்: தஞ்சையில் அனைத்து தொழிற் சங்கத்தினர் மறியல் போராட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்

தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஒன்றிய  அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நாடு தழுவிய மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது

ஒன்றியஅரசு ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகள் நிறைவு செய்கிற நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை.

அன்றாடம் வாழ்க்கைக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்கள் சுருக்கப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மத சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.இந்திய அரசியல் சாசன சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஒட்டு மொத்தத்தில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 16 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பினை ஏற்று தஞ்சாவூரில்  (16.2.2024)  தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு. சேவியர், ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், சிஐடியூ மாநில செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியல் போராட்டத்தில் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரிசி,மளிகை,காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலைகள் குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல் டீசல் எரிவாயு விலை கட்டுப் படுத்த வேண்டும். தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்கள் சுருக்கப்பட்டது. இதை திரும்பப் பெற வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களான வங்கி,மின்சாரம், ரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையில் நியமனம் கூடாது, கட்டு மானம், உடல் உழைப்பு, பட்டு கைத்தறி ,மீனவர், தையல் உள்ளிட்ட நலவாரியங்களை சீர்குலைக்க கூடாது.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் ,தெரு வியாபாரிகள் சட்டம்- 2015 முழுமையாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மின்சார சட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம் திரும்பப் பெற வேண்டும்.

உத்தரபிரதேசம் லக்கிபூர் கேரியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் உள்ளிட்ட கொலையாளி களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மறியல் போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top