புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரத்தில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
நமணசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டு போட்டியானது, ஒரு காளைக்கு 30 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற் குள் 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்கவில்லை என்றால் காளையே போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
களத்தில் சீறி பாய்ந்து வந்த காளைகளை சில குழுவினர் போட்டி போட்டு மடக்கி பிடித்தனர்.சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கை பிடியில் சிக்காமல் வீரர்களை திக்குமுக்காடச் செய்து பரிசுகளை வென்றது.
இதில் மாடுபிடி வீரர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. இதில் வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கபணம் பரிசு பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது.
காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் களத்திற்குல் அனுமதிக்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை கால்நடைத் துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். நமணசமுத்திரம் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.