திருக்குறளை பெருமைப்படுத்தியவர்களைக் கொண்டாட வேண்டும் என்றார் ஞானாலயா பா .கிருஷ்ணமூர்த்தி.
உலகத்திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையின் மாதாந்திர சிறப்புக்கூட்டம், அப்பேரவையின் துணைத்தலைவர் பேரா. மு.பாலசுப்ரமணியன் தலைமையில், அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:
திருக்குறளின் பெருமையைப் பேசுவதோடு அதை பெருமைப்படுத்திய, குறள் வழி நின்றவர்களையும் வாழ்ந்தவர்களையும் கொண்டாட வேண்டியது அவசியம்.
புதுக்கோட்டையில், திருக்குறள் கழகத்தை தொடங்கி, குறளின் மேன்மையைப் பேசியதோடு மட்டுமல்லாமல், புகழ் பெற்ற மருத்துவர் ராமச்சந்திரன் போன்ற பலரின் வாழ்வில் ஒளியேற்றியவர் “அண்ணலார்” என்றழைக்கப்படும் சுப்பிரமணியனார்.
அதே போல புதுக்கோட்டையில் பிறந்து பணி நிமித்தமாக கல்கத்தா சென்று, அங்கே தமிழ் வளர்த்து, திருக்குறளை வங்காளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட கல்கத்தா எஸ். கிருஷ்ணமூர்த்தி.
தமிழ் மொழி வகுப்பை கடைசி வகுப்பாக மாற்றியதை ஒப்பாமல் வேலையை உதறித்தள்ளிய மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் அரசன் சண்முகனார் போன்று எண்ணற்றவர்கள் தமிழுக்கும், குறளுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து கொண்டாட வேண்டியது உலகத் திருக்குறள் பேரவையின் கடமை என்றார் அவர்.
இக்கூட்டத்தில் முன்னதாக , மறைந்த உலகத்திருக்குறள் பொருளாளர் ஆலங்குடி மெ. இராமச்சந்திரன் செட்டியார், திருவண்ணாமலை, குன்றக்குடி ஆதீனப் புலவர் மரு. பரமகுரு ஆகியோரின் திருவுருவப்படங்கள் முறையே மருத்துவர் ராமதாஸ், சந்திரா ரவீந்திரன் ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரம்பக்குடியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி தீஷா திரவியராஜுக்கு, அவருடைய தமிழ்ச் சொற்பொழிவைப் பாராட்டி “நற்றமிழ் நாவரசி ” என்ற பட்டத்தை ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தியால் வழங்கி பாராட்டினார். நிகழ்வில் “வள்ளுவரும் வள்ளலாரும் ” என்ற தலைப்பில் தீஷாதிரவியராஜ் உரையாற்றினார்.
முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும், உலகத்திருக்குறள் பேரவையின் புதுக்கோட்டை கிளைச் செயலாளர் சத்தியராம் ராமுக்கண்ணு வரவேற்றார். திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியை முனைவர் மகாசுந்தர் தொகுத்து வழங்கினார்.நிறைவாக உலகத்திருக்குறள் பேரவை இளைஞர் அணி துணைச் செயலர் கண்ணன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதில், புலவர் மதிவாணன், திருக்குறள் கழகத் தலைவர் ராமையா, ரோட்டரி மேனாள் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம், கவிஞர் முருகபாரதி,வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன், மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, உலகத்திருக்குறள் பேரவை உறுப்பினர்கள் புண்ணிய மூர்த்தி, புலவர் மா.ஜெயா, கு.சுப்பிரமணியன் , ஜி.எஸ்.தனபதி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.