Close
நவம்பர் 21, 2024 6:29 மணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

அண்ணாமலையார் திருக்கல்யாண உற்சவம்

பஞ்சபூதங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைப்பெற்றும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் சிறப்புக்குரியது. அதன்படி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று (24ம் தேதி) விமரிசையாக தொடங்கியது .
அதையொட்டி, காலை 10 மணி முதல் 11.45 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில், சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடி மரம் முன்பு சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இரவு 11 மணி அளவில், திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சுவாமி மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாட வீதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மொத்தம் 6 நாட்கள் இந்த திருமண விழாவை நடத்துவார்கள்.
விழாவின் தொடர்ச்சியாக, இன்று (25ம் தேதி) கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடியும், 26 ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 27 மற்றும் 28 ம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
விழாவின் நிறைவாக, வரும் 29 ம் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும், குமரகோயிலில் மண்டகபடியும் நடைபெறும். அன்று இரவு வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் சுவாமி வீதியுலா நடைபெறும். பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, விழாவுக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையில் அறங்காவலர்கள் , திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி , மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top